×

இறச்சகுளம் - கீரிப்பாறை 4 ரூட்டில் பயணிப்பதில் சிக்கல்... நான்கு வழிச்சாலையில் விபத்து அபாயம்

நாகர்கோவில்: நாகர்கோவில் 4 வழிச்சாலையில் புத்தேரி பகுதியில் மேம்பாலம் அமைக்காவிட்டால், அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நாகர்கோவிலில் பிரதான மாநில நெடுஞ்சாலைகளில் முதன்மையானது கீரிப்பாறை செல்லும் 4 ரூட்டான சாலை எண் 194. இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். வடமதி என அழைக்கப்படும் இந்த சாலை செல்லும் பகுதியில் புத்தேரி, இறச்சகுளம், நாவல்காடு, ஈசாந்தி மங்கலம், துவரங்காடு, பூதப்பாண்டி, சீதப்பால், தாழக்குடி, திட்டுவிளை, தெரிசனம்கோப்பு, அருமநல்லூர், காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், கடுக்கரை, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை போன்ற பெரிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து மருத்துவ வசதி பெறவும், கல்வி நிலையங்களுக்கு செல்லவும் மற்றும் பொருட்கள் வாங்கவும் பெரும்பாலான மக்கள் நாகர்கோவிலுக்கு தான் வருகிறார்கள். இதுதவிர சுருளோடு, குலசேகரம், அருமனை போன்ற மேற்கு மாவட்ட முக்கிய ஊர்களுக்கும் இந்த சாலை வழியாகத்தான் அரசு பஸ்கள் சென்று வருகின்றன.

மிகவும் பிரதானமான இச்சாலையில் புத்தேரி பகுதியில் ரயில்வே கேட் மூடப்படும் போது, சில நிமிடங்களில் இரு பக்கங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும் ஆம்புலன்சுகளும், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் உயிர் பலிகள் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு. இதனால் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர், புத்தேரி பகுதியில் ரயில் தண்டாவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வருகின்றன. தற்போது புத்தன்அணை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்துகள் ஏற்பட்டு உயிர்களும் பலியாகி வருகின்றன. இச்சாலை சீரமைக்கப்படும் என கலெக்டர் மற்றும் தளவாய்சுந்தரம் ஆகியோர் கூறிய உத்தரவாதங்களும் காற்றோடு போய்விட்டது.

தற்போது 4 வழிச்சாலை மூலமாக மிகப்பெரும் தலைவலி 4 ரூட் கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 4 வழிச்சாலை பணிகள் புத்தேரி பகுதியிலும், தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக புரவசேரி பகுதியில் பழையாற்றில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோல் புத்தேரி குளத்திலும் தரைமட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. 4 வழிச்சாலையில் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்லும். அதிலும், குமரியில் அமைக்கப்பட்டு வருவது எக்ஸ்பிரஸ் வே எனப்படும் அதிவிரைவு 4 வழிச்சாலை. அரை மணிநேரத்தில் திருவனந்தபுரம் சென்று விடலாம் என்றால், இச்சாலையில் பயணிக்கும் வேகம் பற்றி கூறவே வேண்டாம். மேலும் இப்பகுதியில் சிறிய வளைவும் உள்ளது. எனவே 4 ரூட்டில் வரும் அதிகபட்ச வாகனங்கள், அதிவிரைவு சாலையான 4 வழிச்சாலையை கடக்கும் போது, விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும்.

எனவே புத்தேரி பகுதியில் அசம்பு சாலையில் 4 வழிச்சாலைக்கு மேல் செல்லும் வகையில் மேம்பாலம் அல்லது அணுகு சாலை, சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இது பற்றி குமரி மக்கள் பிரதிநிதிகளும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். முக்கால் வாசி பணிகள் நிறைவு: நாகர்கோவில் பகுதியில் 4 வழிச்சாலைக்கான முக்கால்வாசி பணிகள் முடிவடைந்துள்ளது. பழையாறு பாலம், நுள்ளிகுளம் பாலம், தேரூர் ரயில்வே மேம்பாலம், வெள்ளமடம் தோவாைள இடையே ரயில்வே மேம்பாலம் பணிகள் முடிவடைந்தால் ெபாற்றயைடி - அப்டா, காவல்கிணறு - அப்டா, அப்டா - தோட்டியோடு 4 வழிச்சாலை போக்குவரத்து ஒரு சில மாதங்களில் தொடங்கி விடும். இதில் புத்தேரி குளத்தில் அமைக்கும் பாலம் மட்டும் கூடுதலாக ஒரு சில மாதங்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Accidents, risk
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பஸ்களில் ஆர்டிஒ., ஆய்வு