நெல்லை டவுனில் தொடரும் அவலம்: தெருவில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

நெல்லை: நெல்லை டவுன் எண்ணாயிரம் பிள்ளையார்கோவில் தெருவில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. நெல்லை மாநகராட்சி சார்பில் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டப்பணிக்காக நெல்லை டவுன் 44வது வார்டு பகுதியில் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி கழிவுநீரோடை மாற்று பகுதி வழியாக திருப்பி விடப்பட்டது. இதனிடையே கழிவுநீர் வெளியேற வழியின்றி நெல்லை டவுன் எண்ணாயிரம்பிள்ளை கோவில் தெருவில் தேங்கி நிற்கிறது. நேற்று காலை கழிவுநீர் அதிக அளவில் தேங்கி நின்றதால் அப்பகுதியே சாக்கடை குளமாக மாறியது. துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் பகுதியையும் கழிவுநீர் சூழ்ந்து குட்டை போல் மாறியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் குடிநீர் பிடிக்கமுடியாத அவலம் தொடர்கிறது. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி துரிதமாக செயல்பட்டு கழிவுநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Related Stories: