புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க ரூ.24 கோடியில் நவீன கருவி: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் 24 கோடி ரூபாயிலான லீனியர் ஹாசிலேட்டர் என்ற கருவிகள் சென்னை மற்றும் மதுரை மருத்துவமனையில் இன்னும் 15 நாட்களில் தொடங்கி வைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனையின் அதிநவீன நரம்பியல் சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நரம்பியல் அறுவை சிகிச்சைகளில் உதவக்கூடிய உலகின் அதிநவீன 4k, 3D மற்றும் ரோபோடிக் விஷுவலைசேஷன் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு இது போன்ற ரோபோடிக் கருவி பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது என்றார்.

இதை தொடர்ந்து இதே போன்று அரசு மருத்துவமனையிலும் கருவிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறிய அவர், 24 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் ஹாசிலேட்டர் என்ற கருவிகள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இந்த கருவிகள் சென்னை, மதுரை உள்ளிட்ட 10 ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்படவுள்ளதாக கூறிய அவர், சென்னை மற்றும் மதுரையில் இன்னும் 15 நாட்களில் இந்த நவீன கருவி தொடங்கி வைக்கப்படவுள்ளது என்றார்.

இதை தொடர்ந்து ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மேலைநாடுகளில் பிரபலமாக உள்ளது என்ற அவர், இந்த தொழில்நுட்பங்கள் கொண்ட அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது அறிமுகம் செய்யப்பட்ட ரோபோடிக் தொழில்நுட்பம் கொண்ட சிகிச்சை முறை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இடம்பெறவில்லை என்ற அமைச்சர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் அரசு சார்பில் பேசப்படும் என்றார்.

Related Stories: