×

இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம்; அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார். 10 முதல் 14  நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாமீன் கோரி ப.சிதம்பரம் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் அதை எதிர்கொள்வது பற்றி சிபிஐ ஆலோசனை நடத்தியுள்ளது. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் உடனே அமலாக்கத்துறை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக  இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்காக அந்நிய  முதலீட்டு  மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாக கூறி  சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதே  விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய  அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது  வழக்குப் பதிவு செய்தனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க அனுமதிக்கும்படி  சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதே கோரிக்கையை அமலாக்கத் துறையும் முன்வைத்தது. இதனால், கைது செய்யப்படலாம் என அச்சமடைந்த சிதம்பரம், முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார்.

ஆனால், நீண்ட விசாரணைக்கு பின்னர் அவரது கோரிக்கையை நேற்று முன்தினம் நிராகரித்த உயர் நீதிமன்றம், ஜாமீன் வழங்க முடியாது என அறிவித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பில் அடுத்த சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு, அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது.

ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த கோரிக்கையை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் தலைமறைவாகி 27 மணி நேரத்திற்குப் பிறகு, நேற்று இரவு 8.11 மணி அளவில் அவர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் திடீரென வந்தார்.  அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பேட்டியை முடித்துக் கொண்ட சிதம்பரம், அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டுக்கு காரில் சென்றார். அவரை பின்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளும் விரைந்தனர். சுமார் 9 மணி அளவில் சிதம்பரம் வீட்டை அதிகாரிகள் சென்றடைந்த போது, அங்கு கேட்கள் பூட்டப்பட்டு கிடந்தன. இதனால், சுவர் ஏறி குதித்தும், பின்வாசல் வழியாகவும் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.  சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, இரவு 9.45 மணி அளவில் சிபிஐ அதிகாரிகள், சிதம்பரத்தை கைது செய்தனர்.


Tags : P. Chidambaram, INX. Chidambaram arrest, bail, CBI, Enforcement Department, Central government, court
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...