புற்று நோயை காரணம் காட்டி விவாகரத்து கோர முடியுமா? : உயர் நீதிமன்றத்தில் நூதன வழக்கு

சென்னை: புற்றுநோயை காரணம் காட்டி பாதிக்கப்பட்டவரிடம் விவாகரத்து கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்  பெண் தரப்பில் வாதிடப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த திருமால் மற்றும் அம்பிகா ஆகியோருக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில நாட்களிலேயே திருமாலின் மனைவிக்கு வாய்ப்புற்று நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அம்பிகாவுக்கு தாடை நீக்க அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.இந்த நிலையில், மனைவிக்கு புற்றுநோய் இருப்பதால், தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக கூறி திருமால் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஊத்தங்கரை நீதிமன்றம், இருவருக்கும் விவகாரத்து வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து திருமாலின் மனைவி கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஊத்தங்கரை நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை ரத்து செய்தது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமால் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அம்பிகா தரப்பில், ஆஜரான வக்கீல் வி. சுப்பிரமணியம் வாதிடும்போது, 2011ம் ஆண்டு புற்று நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும் அம்பிகா உடல் நலத்துடன் தான் இருக்கிறார்.

இந்து திருமண சட்டத்தின் படி தொழுநோய், ஹெச்ஐவி போன்ற தொற்றுநோய் இருந்தால் மட்டுமே விவகாரத்து கோர முடியும். புற்றுநோயை காரணம் காட்டி விவகாரத்து கோர முடியாது. தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் புற்றுநோய் பரவாது. புற்று நோயை காரணம் கூறி விவகாரத்து அளிக்கப்பட்டால், அந்த உத்தரவை பின்பற்றி பலரும் விவகாரத்து கோர நேரிடும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Related Stories: