×

காவிரி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியை கண்காணிக்காத பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை

* முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை
* பொதுப்பணித்துறையில் பரபரப்பு

சென்னை: காவிரி ஆற்றுப்படுகையில் தூர்வாருவதை கண்காணிக்க நியமிக்கப்பட்டவர்கள் 9 நாட்களாகியும் பணியில் சேராத நிலையில்,  பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன ேதவைகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ₹5 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கண்காணிக்க பொதுப்பணித்துறை சார்பில் 19 உதவி செயற்பொறியாளர்கள் உட்பட 75க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் பலர் டெல்டா மாவட்ட பகுதிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பணிக்கு சென்றனர். அங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக எம்புத்தகம் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

மாறாக, தாங்கள் பணிகள் நடைபெறும் பகுதிகளில் இருந்தால் போதும் என்று மேலிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் தினமும் பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்கின்றனர். மேலும், காவிரி டெல்டா பகுதியை தூர்வாரும் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களில் 25க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி தூர்வாரும் பணியை கண்காணிக்க பொறியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நியமிக்கப்பட்டனர். அதில், 9 நாட்களாகியும் பணியில் சேராத உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பணியில் உள்ளவர்களுக்கும் நோட்டீஸ்


காவிரி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தற்போது வரை எங்கு பணிபுரிய வேண்டும் என்பது தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பணியில் உள்ளவர்களுக்கும் கோட்ட செயற்பொறியாளர்கள் விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, பொறியாளர்கள் சிலர் பணியில் இருப்பதாக கூறினாலும், பணி நடைபெறும் இடத்தில் இருந்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு அவர்களிடம் கோட்ட செயற்பொறியாளர்கள் கூறியிருப்பது பொறியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Strong action,engineers, track of work ,river Cauvery
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...