சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் கார்த்தி சிதம்பரம் மீதான ஐடி வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வருமான வரிக்கணக்கில் கடந்த 2015-16ம் ஆண்டு, முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 1.35 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டார்.

Advertising
Advertising

இந்த உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மற்றும் நிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, வழக்கு பதிவு செய்யும்போது மனுதாரர் எம்.பி.யாக இல்லை. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய வருமான வரி வழக்கை அமர்வு நீதிமன்றமான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு. அதனால், வழக்கை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தொடர்பாக தலைமைப் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்யும் வரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு, வருமான வரித்துறை, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: