ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், கட்டிடத்தில் ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும் : அமைச்சர் வேலுமணி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் ஒருமாத காலத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மாநில அளவில் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பாஸ்கரன்,   ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த கட்டிடங்களில் ஒருமாத காலத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கப்பட வேண்டும்.  இந்த பணிகள் முடிந்ததும், அதுகுறித்த விவரங்களை தலைமையிடத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

Advertising
Advertising

மேலும், அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பு கட்டிடங்கள் உட்பட அனைத்து அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள், பெரும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், தனி குடியிருப்புகள்,  பண்ணை வீடுகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும், சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும், மழை காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை விரைந்து ஏற்படுத்திட வேண்டும்.

சட்டப்பேரவையில்  விதி-110ன் கீழ் முதல்வர் கடந்த மாதம் அறிவித்தபடி, கிராமப்புறங்களில் தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்திட ஊரக பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை கொண்டு 312 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ள 10,000 தடுப்பணைகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: