ப.சிதம்பரம் சட்டப்படி வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

சென்னை: ப.சிதம்பரத்தை பொறுத்தவரையில் சட்டத்தின்படி வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். தமிழ்நாடு கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.   கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை  செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு  சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ்,  ஆலோசகர் கார்த்திகேயன் மற்றும் கூடுதல் பதிவாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:

தமிழகம் முழுவதும் 2011 முதல் 15.08.2019 வரை 83,67,431 விவசாயிகளுக்கு 43,331.81 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் (2016 முதல் 15.8.2019 வரை) 32,72,795 விவசாயிகளுக்கு 20,117.57 கோடி அளவிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2011 முதல் 2019 வரை 1,287.43 கோடி அளவிற்கு வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2019-20) பயிர்கடன் குறியீடாக 10,000 கோடி  நிர்ணயிக்கப்பட்டு, 15.8.2019 வரை 2,08,809 பேருக்கு 1,541.64 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதியாக, உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கிறது. ப.சிதம்பரத்தை பொறுத்தவரையில், அவருடைய நியாயத்தை சொல்ல உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். வழக்கு விசாரணைக்கு வரும்போது அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கிறதா என்று பார்ப்போம். யாராக இருந்தாலும் சட்டத்தின்படி வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ மேலும் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘தமிழக பால்வளத்துறை லாபத்தில்  இயங்குவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்ன கருத்தும் சரிதான். நஷ்டத்தில் இயங்குவதாக சொன்ன முதல்வரின் கருத்தும் சரிதான். தமிழகத்தில் அதிகளவில்  பால்வள ஒன்றியங்கள் இருக்கிறது. இதில் சில சங்கம் லாபத்திலும், சில  சங்கங்கள் நஷ்டத்திலும் இயங்குகிறது. அதைத்தான் முதல்வர் அப்படி கூறினார்’’ என்றார்.

Related Stories: