×

தமிழக மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம் : காசிமேடு துறைமுகத்தில் பரபரப்பு

சென்னை: ஆந்திர மாநிலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆந்திர மாநிலம், ஹரிகோட்டா மற்றும் நெல்லூருக்கு இடையே கடலில் மீன் பிடித்தபோது 5 விசைப் படகுகள் மற்றும் சென்னை காசிமேட்டை சேர்ந்த 30 மீனவர்களை கடந்த வாரம் அந்த மாநில மீனவர்கள் சிறைபிடித்தனர். அவர்களிடம் பணயத்தொகை கொடுத்தால்தான் விடுவிப்போம் என தெரிவித்து வந்தனர். இதுகுறித்து மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் அலுவலகத்தில் காசிமேட்டை சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினர் புகாரளித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று காலை காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள மீன்பிடி துறைமுக இயக்குநர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு அதிகாரிகள் இல்லாததால் மனு கொடுக்க முடியாமல் மீனவர்கள் பரிதவித்தனர். தகவலறிந்து காசிமேடு போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடம், ‘ஆந்திர கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது அங்குள்ள மீனவர்கள் படகுகளை சிறைபிடித்து அதிகளவு பணம் கேட்டு கொடுமைப்படுத்தி வருகின்றனர். அப்படி பணம் தராதவர்களை சிறை பிடித்து வைத்துள்ளனர். இந்த பிரச்னைக்கு மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் மற்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என காசிமேடு மீனவர் அமைப்பினர் கூறி உதவி இயக்குநர் அலுவலக ஊழியர்களிடம் மனு அளித்தனர். இதற்கிைடயே, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அதிக விசைத்திறன் கொண்ட இன்ஜினை பயன்படுத்தி  மீன்பிடித்து செல்வதால்தான் ஆந்திர மீனவர்கள் காசிமேடு மீனவர்களை சிறைபிடிப்பதாக கூறி, அதிக விசைத்திறன் படகை தடை செய்ய வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.

Tags : Fishermen Siege Struggle , Andhra Pradesh
× RELATED அரியானாவில் நடத்தப்பட்ட தடியடி பற்றி...