×

சமூக வலைதள கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமாக்க வழக்கு ஆன்லைன் குற்றங்கள் தடுப்பு வழக்குகள் மட்டுமே விசாரணை : ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை வாசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கூகுள், பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைன் குற்றங்கள் தொடர்பாக போலீசார் கேட்கும் விவரங்களை வழங்குவது தொடர்பாக சில  உத்தரவுகளையும் பிறப்பித்தது. இந்நிலையில், சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று பேஸ்புக் நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமூக வலைதள கணக்குகளை தொடங்க ஆதாரை கட்டாயமாக்க கோரிய வழக்கை  விசாரிக்கலாம் என்றும், இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை இணைக்க கோரிய வழக்கு,  நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது பேஸ்புக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தஹி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முடிவு எட்டும் வரை இந்த வழக்கின்  விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று வாதிட்டார்.தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால் விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள், சமூக வலைதள கணக்குகளை தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்ற  கோரிக்கை குறித்து விசாரிக்கவில்லை. ஆன்லைன் குற்றங்களை தடுப்பது  குறித்து மட்டுமே விசாரிக்கிறோம் என்று விளக்கமளித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Adaru Forcing case,social networking account, investigation , online crime prevention cases
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...