தமிழகத்தில் புதிய போக்குவரத்து சட்டம் நடைமுறைக்கு வந்தது மது போதையில் வாகனம் ஓட்டியவருக்கு முதல் முறையாக 10 ஆயிரம் அபராதம்

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக புதிய போக்குவரத்து நடைமுறை சட்டத்தின் படி, குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபருக்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி  உள்ளது. அதன்படி மோட்டர் வாகன சட்டம் 2019ன் படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அபராத தொகை 100ல் இருந்து 1000மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அபராத தொகை 2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமா உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 24 போக்குவரத்து விதிமுறைகளுக்கு அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, புதிய மோட்டர் வாகன சட்டத்தின் படி குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் மீது இனி 100 பதில் 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் ஹெல்மெட் அணியவில்லை என்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கடந்த 7ம் தேதி முன் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி புதிய போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் தமிழகத்திலேயே முதல் முறையாக திருவல்லிகேணி பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி வந்த வாலிபர் ஒருவருக்கு 10 ஆயிரம் அபராதம் தொகையை சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று விதித்துள்ளனர். அதன்படி சம்பந்தப்பட்ட வாலிபர் 10 ஆயிரத்திற்கான அபராத தொகையை எழும்பூர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். இதையடுத்து சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் புதிய போக்குவரத்து விதிகளின் படி வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை விதித்து வருகின்றனர். இதற்கிடையே புதிய போக்குவரத்து விதிமுறைகளை தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்த ேவண்டாம் என்றும், மக்களுக்கு போதி விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகே நடைமுறைப்படுத்தலாம் என்று தமிழக போக்குவரத்து செயலாளர், காவல் துறைக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சென்னை மாநகர போக்குரவரத்து போலீசார், அவசர அவசரமாக புதிய போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: