அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை : அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. பருவ மழை குறைவுக் காரணமாக தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் என அனைத்தும் தனியார் தண்ணீர் லாரிகளை நம்பித்தான் உள்ளன. தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சில பகுதிகளில் நிலத்தடி நீரை எடுத்து விநியோகிக்கின்றனர். அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சுவதால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறை பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாகக் கூறி, லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது போலீசாரும் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

இதையடுத்து தண்ணீர் எடுக்க முறையான நடவடிக்கை வழங்கினால் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்வோம் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்நிலையில், நேற்று மாலை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் தலைமையில் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன், தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். பிறகு தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முதன்மை செயலாளர் ஹர்மிந்தர் சிங்குடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் நிஜலிங்கம் கூறுகையில், ‘‘தனியார் தண்ணீர் லாரிகள் தண்ணீர் எடுக்க முறையான அனுமதி மற்றும் லாரிகளுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர். இதையடுத்து எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்’’ என்றார்.

Related Stories: