இனப்படுகொலை குற்றவாளியை தளபதியாக்குவதா? இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் : வைகோ, ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இனப்படுகொலை செய்த குற்றவாளியை தளபதியாக்கும்  இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளனர். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவிகளைப் பெற்று, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தாக்குதல்களில், லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலைகளை நடத்திய சிங்கள ராணுவத்தின் 58வது டிவிசன் கமாண்டர் சவேந்திர சில்வா, யூதர்களை கொன்று குவித்த அடால்ப் ஈச்மெனைப் போல், பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டிய கொலைகாரப் பாவி ஆவான். ஐ.நா. வழங்கிய உதவிப் பொருட்கள், யுத்தத்தால் வீடு வாசல்களை இழந்து, காடுகளுக்குள் நிர்கதியாக நின்ற அப்பாவி தமிழர்களுக்கு கிடைக்க விடாமல் செய்தவன். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை பிடித்துச் சுட்டுக்கொல்ல ஆணை இட்டவன், தமிழ்ப் பெண்களின் மானத்தை கற்பைச் சூறையாடி, கொன்று குவித்த அரக்கன், இறுதிக்கட்டப் போரின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவ முகாம்கள் மீது குண்டுகளை வீசி, அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த தமிழர்களைக் கொன்றவன்.

பால் பவுடரும் உணவுப் பொருட்களும் வாங்க வரிசைகளில் நின்ற தாய்மார்கள் மீதும் குண்டுகளை வீசக்காரணம் ஆனவன், கொலைகார ராணுவத்தினரை வெள்ளை வேன்களில் அனுப்பி, தமிழர்களை ரத்த வேட்டை ஆடியவன், அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைகளைச் செய்த கயவன்தான் சவேந்திர சில்வா. சவேந்திர சில்வா நியமனத்திற்கு அமெரிக்க அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஏழரைக்கோடித் தமிழர்களைக் குடிமக்களாகக் கொண்டுள்ள இந்திய அரசு கண்டிக்கவில்லை. மாறாக, கொஞ்சிக் குலவுகின்றது. மன்னிக்க முடியாத தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 2009ம் ஆண்டு போரில் அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் இவர்.  இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த போரில் தமிழர்களுக்கு எதிராக ஏராளமான போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டதை விசாரணை மூலம் உறுதி செய்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையம், அத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஷவேந்திர சில்வா உள்ளிட்டோர் மீது நீதிமன்ற விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. அப்படிப்பட்டவரை தண்டிப்பதற்கு பதிலாக பதவி உயர்வு வழங்கி, கவுரவப்படுத்தி இருப்பதன் மூலம் இலங்கையில் இனியும் மனித உரிமைகள் மதிக்கப்படாது.

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை எந்த வகையிலும் நியாயமாக நடைபெறாது என்பதை சிங்கள அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஷவேந்திர சில்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளில் சாட்சியம் அளிக்கக்கூடாது என்று ஈழத்தமிழர்கள் மிரட்டப்படும் ஆபத்துகளும் உள்ளன. ஈழ தமிழர்களை பாதுகாக்க வேண்டியதும், இலங்கை போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதும் இந்திய அரசின் கடமை. ஆகவே, இலங்கையின் ராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை இந்தியா கண்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: