×

மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அரசாணைப்படி தீர்வு கிடைக்கிறதா? : தலைமைச்செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் கோரிக்கை மனுக்கள் மீது அரசாணைப்படி தீர்வு காணப்படுகிறதா என்பது குறித்து, தலைமைச்செயலர் பதிலளிக்க  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொதுநலன் மற்றும் தங்களின் கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் மனுக்கள் கொடுக்கின்றனர். சில நேரங்களில் இதற்கு ஒப்புகை சீட்டு கூட வழங்குவதில்லை.  சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கிடப்பில் போடுவதால் தீர்வு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. 2001 அரசாணைப்படி, எந்தவொரு கோரிக்கை மனுவையும் ஒரு வாரத்திற்கு மேல் அரசு அலுவலகங்களில் நிலுவையில் வைக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. 2015 அரசாணையில் மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண  கூறப்பட்டுள்ளது. 2018 அரசாணையில், மனுக்கள் மீது 3 நாட்களுக்குள் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். மனுவின் விபரங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள் கணினியில் பதியப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணைப்படி எந்த அதிகாரிகளும் நடந்து கொள்வதில்லை. எனவே, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீதான தீர்வு தொடர்பான அரசாணைகளை முறையாகவும், முழுமையாகவும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும். அரசாணைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய உயர்மட்ட குழுவை அமைக்கவும், தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான குழுவையும், கலெக்டரைக் கொண்ட மாவட்ட அளவிலான குழுவையும் அமைக்கவும், அரசாணையை நிறைவேற்ற தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர்,  ‘‘பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் கோரிக்கை மனுக்களின் மீதான நடவடிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் பின்பற்றப்படுகிறதா? அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்துகின்றனரா? இ-சேவை மையங்கள் மூலம் அளிக்கப்படும் மனுக்களுக்கு முறையாக தீர்வு கிடைக்கிறதா என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை செப். 18க்கு தள்ளிவைத்தனர்.

Tags : constitutional solution, peoples' petitions, Icord Branch directive, Chief Secretary
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...