புதுச்சேரி ஆளுநர் அதிகார விவகாரம் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், ஆவணங்களைக் கேட்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், “ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில், துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக் கூறி, அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட தடை விதித்து” கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  அமன் லேகி, டெல்லி துணை நிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்தான், புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார் என்று வாதிட்டார்.

எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.மாசிலாமணி, ெடல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசு ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அதன்படிதான் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று வாதிட்டார். இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் தரப்புக்கு பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு தராமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. செப்டம்பர் 4க்குள்  லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.4க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: