×

பேராசிரியர் நியமனம், விடைத்தாள் கொள்முதலில் முறைகேடு சேலம் பெரியார் பல்கலையில் ரெய்டு : ஆவணங்களை அள்ளிச்சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ்

சேலம்: சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் கீழ், சேலம் உள்பட 4 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, சுவாமிநாதன் இருந்த காலத்தில் (2015-2018), 140க்கும் மேற்பட்ட பேராசிரியர் மற்றும் பேராசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில், உரிய விதிமுறைகள் மற்றும் தகுதி நிலைகளை பின்பற்றாமல் நியமனங்கள் நடந்தன. இதுகுறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் சென்றது. இதேபோல், அதே காலகட்டத்தில் பருவத்தேர்வுகளின் போது, மாணவர்களுக்கு வழங்கிய விடைத்தாள்களில், பார் கோடு மற்றும் மாணவர்களின் புகைப்படம் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது.

இதற்காக தனியார் நிறுவனத்திடம், டெண்டர் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக விடைத்தாள்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதனிடையே, ஒரு விடைத்தாள் 10க்கு கோரியிருந்த நிறுவனத்தை விடுத்து, 25 வரை விலை அதிகமாக கோரிய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம், ஒரு விடைத்தாளுக்கு 15 என்ற அடிப்படையில, மொத்தம் ₹55 லட்சம் வரை, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, குறைந்த விலைக்கு டெண்டர் கோரியவர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தனர்.
முறைகேடான நியமனம் மற்றும் விடைத்தாள் கொள்முதல் ஊழல் ஆகிய இரு விவகாரங்கள் தொடர்பாக, தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணையில், ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கடந்த வாரம் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலத்தில் சோதனை நடத்தினர். இதனையடுத்து, விடைத்தாள் கொள்முதல் தொடர்பாக, விடைத்தாள் கட்டுகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றை அள்ளிச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழக நிதி அலுவலரிடம், கடந்த சில தினங்களாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், பேராசிரியர் நியமன முறைகேடு குறித்து, பல்கலைக்கழகத்தின் ஒருசில துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் தேர்வு செய்யப்பட்ட முறை, கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. இதில், பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால், முறைகேடாக நியமனம் பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீதியில் உறைந்துள்ளனர்.

Tags : Prof. Appointment, Answer Scandal Purchase Scam , Salem Periyar University
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...