எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு தேசிய நெடுஞ்சாலைகளாக 2 மாநில சாலை மாற்றம்

ஈரோடு: பவானி-தொப்பூர், பவானி- கரூர் மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும் என்று  ஈரோட்டில் நடந்த கல்லூரி விழாவில் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளை, வேளாளர் மகளிர் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா நேற்று துவங்கியது. விழாவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். ஈரோடு கலெக்டர் கதிரவன், வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேளாளர் கலை அறிவியல் கல்லூரிக்கான கட்டிடம், பொன்விழா நினைவு கல்வெட்டு மற்றும் பொன்விழா தபால் உறை ஆகியவற்றை வெளியிட்டு பேசியதாவது:

வேளாளர் மகளிர் கல்லூரி கடந்த 1969ம் ஆண்டு 280 மாணவிகளுடன் துவங்கப்பட்டது. இன்று 6,300 மாணவிகள் படிக்கின்றனர். அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் 20 ஆயிரம் மாணவர் படிக்கின்றனர். உயர்கல்வித்துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 32 சதவீதமாக இருந்த நிலையில் அது தற்போது 48.6 சதவீதமாக உயர்ந்து நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை பெருந்துறை சாலையில் 5.5 கி.மீ. தூரத்திற்கு ₹300 கோடியில் உயர்மட்ட பாலம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பவானி-தொப்பூர், பவானி- கரூர் மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும். ஈரோடு மாநகர மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணி 3 மாதத்தில்முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கல்வி மட்டுமே என்றும் அழியாத செல்வம். எனவே மாணவ, மாணவியர் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாணவிகள் சமூக வலைதளங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். சமுதாய பொறுப்புகளை மாணவர்கள் தட்டிக்கழிக்க கூடாது.  இவ்வாறு  அவர் பேசினார்.

Related Stories: