×

அதிக ஜிஎஸ்டி வரியால் பிஸ்கட் விற்பனை சரிவு: பார்லே கம்பெனியில் உற்பத்தி நிறுத்தம் 10,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு

பெங்களூரூ: பார்லே புராடட்க்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது பிரபலமான பிஸ்கட் கம்பெனி. இந்த நிறுவனத்தின் பிஸ்கட் பாக்கெட் விற்பனை பெரிதும் சரிந்துள்ளது. இதனால், உற்பத்தியை நிறுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உற்பத்தி நிறுத்தத்தால் 10,000 தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் விடுப்பு தரப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை மற்றும் கூடுதல் ஜிஎஸ்டி வரியால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று பிஸ்கட் கம்பெனியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், தற்போது பெருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கார்கள், துணைமணிகள் உள்பட பல்வேறு தொழில்களில் விற்பனை சரிந்துள்ளது. இதனால் உற்பத்தியை குறைக்க அல்லது நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெருளாதார தேக்க நிலையில் இருந்து தொழில் நிறுவனங்களை காப்பதோடு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தை போக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் பெருக்கத்திற்கு தேவையான ஊக்க சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தொழில் துறையிலர் எதிர்பார்து காத்திருக்கின்றனர்.

பார்லே பிஸ்கட் விற்பனை சரிந்துள்ளதால், உற்பத்தியை குறைக்கவும் தேவைப்பட்டால் நிறுத்தவும் கம்பெனி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வேலை இல்லாததால் சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான தொழிலாளர்களுக்கு விடுப்பு தரப்பட்டுள்ளது என்று கம்பெனியின் உயர் அதிகாரி மயாங் ஷா தெரிவித்தார். அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றால் நிலைமை மிகவும் மோசமாகவிடும். உற்பத்தியை நிறுத்தியதால் தொழிலாளர்களை பணியில் இருந்து அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார். பார்லே பிஸ்கட் கம்பெனி கடந்த 1929ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதற்கு 10 கிளைகளும் 125 ஒப்பந்த உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் நிரந்தரமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 2017ம் ஆண்டில் மத்திய அரசு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இதையடுத்து, பார்லே பிஸ்கட் விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. குறைந்தபட்ச விலையான ₹5க்கு பார்லே ஜி பிஸ்கட் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் விற்பனை முடங்கிவிட்டது.

நுகர்வோர் கூடுதல் விலை கொடுத்து குறைந்த அளவு பிஸ்கட் வாங்க விரும்பவில்லை. இதனால் கிராமப்புறங்களில் குறைந்த விலையில் வாங்கிய பிஸ்கட் விற்பனை சரிந்துவிட்டது. பார்லே கம்பெனியின் ஆண்டு வருவாய் 1.4 பில்லியன் டாலருக்கும் (சுமார் 10,000 கோடி) அதிகம். கூடுதல் ஜிஎஸ்டி வரியால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது இது குறித்து கடந்த ஆண்டு அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் எடுத்துக் கூறி, வரியை குறைக்க கோரிக்கை வைத்தோம்.  இந்தியாவில் பார்லே குளுகோ என்றும் பின்னர் பார்லே ஜி என்றும் விற்கப்பட்ட பிஸ்கட் 1980, 1990, 2003 ஆண்டுகளில் விற்பனை கொடிகட்டி பறந்தது. உலகில் அதிக அளவு விற்கப்பட்ட பிஸ்கட் என்ற பெயரைப் பெற்றது. இந்நிலையில், நாட்டின் பொருளாதார மந்த நிலை காரணமாக ஆட்டோமொபைல் தொழில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

அதேபோல் பல்வேறு சிறு, குறு, பெரிய தொழில் நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் வேலையிழப்பு என்பது தவிர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நுகர்பொருள் விற்பனையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்கெட் ஆய்வு நிறுவனம் நீல்சென் தெரிவித்துள்ளது. பார்லே கம்பெனி மட்டும் நெருக்கடியை சந்திக்கவில்லை, இதேபோல் திண்பண்டங்களை விற்கக் கூடிய நிறுவனங்களும் தடுமாற்றத்தில் சிக்கியுள்ளன. இது குறித்து பிரிட்டானிய இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வருண் பர்ரி கூறுகையில், ₹5க்கு விற்கக் கூடிய பிஸ்கட் பாக்கெட்டைக் கூட வாங்குவதற்கு நுகர்வோர் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்திக்கின்றனர். அந்த அளவுக்கு அவர்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பொருளாதாரம் இந்த அளவுக்கு மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக இது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* பார்லே நிறுவனத்தின் பிஸ்கட் விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளது. இதனால், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி மயாங் ஷா தெரிவித்துள்ளார்.
* கடந்த 2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. பிஸ்கட்கள் மீது கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிறுவனத்தின் பிஸ்கட் விற்பனை பெரிதும் சரிந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5க்கு விற்கக்கூடிய பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டிற்குகூட அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.



Tags : GST tax, biscuit sales decline, Barley Company, workers losing jobs
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...