மீண்டும் போராட்டம் தொடங்கும் சூழ்நிலை தலைநகருக்கு திண்டாடும் ஆந்திரா ஐந்தாவது முறையாக மாறுகிறது

திருமலை: ஆந்திர தலைநகர் அமைக்க அமராவதி பாதுகாப்பான நகரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 5வது முறையாக ஆந்திர மக்கள் தலைநகருக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு, அமராவதியில் தற்காலிக தலைமை செயலகம், தற்காலிக சட்டப்பேரவை கூடம், தற்காலிக உயர் நீதிமன்றம் ஆகியவை கட்டப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து அப்போதைய முதல்வர் சந்திரபாபு அரசு நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளாக அமராவதியில் இருந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் சந்திரபாபு அரசு தோல்வியடைந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் அரசு பதவி ஏற்றது. பதவி ஏற்று 3  மாதங்கள் கடந்த நிலையில் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அமராவதியின் பல இடங்கள் வெள்ளநீரில் பாதிக்கப்பட்டதாகவும் அமராவதியில் தலைநகர் அமைப்பது பாதுகாப்பானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்திற்கு வேறு எந்த இடத்தில் தலைநகர் அமைப்பது என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக நகராட்சிகள் துறை அமைச்சர் போச்சா  சத்தியநாராயணா தெரிவித்திருந்தார். ஆந்திர தலைநகர் எந்த பகுதியில் அமையும் என்று அரசு இன்னும் தெளிவான முடிவை அறிவிக்காத நிலையில் மீண்டும் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக கர்னூல் அமைய வேண்டும் என ஒரு பிரிவினரும் விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என ஒரு பிரிவினரும் கூறி வருகின்றனர்.  இதனால் ஆந்திர மாநிலத்திற்கு எந்த இடத்தில் தலைநகர் அமையும் என்பது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்ட பிறகு தற்போது 5வது தலைநகரை எதிர்நோக்கி ஆந்திர மக்கள் காத்திருக்கின்றனர்.

எந்த பகுதியில் வரும் என்று தெரியாத நிலையில் தங்கள் பகுதியிலேயே தலைநகர் அமையவேண்டும் என ராயலசீமா, கடலோர ஆந்திரா,  வட ஆந்திரா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெகன்மோகன் தலைமையிலான அரசு எந்த இடத்தில் தலைநகரை அமைக்கும் என்பது விரைவில் தெரிய உள்ளது. அதற்குள் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் தங்கள் பகுதியிலேயே தலைநகர் வருவதாக கூறி நிலங்களை விற்பனை செய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன் கூறும்போது, ‘முதல்வர் ஜெகன்மோகனை காங்கிரஸ் சார்பில் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், திருப்பதியில் மருத்துவமனை, பல கல்வி நிறுவனங்களும், சர்வதேச விமான நிலையம், அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் ரயில்வே முனையம் அனைத்து வசதிகளும் உள்ளது. அமராவதியை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அவ்வாறு மாற்றும்பட்சத்தில்  திருப்பதியை தலைநகராக அறிவிக்கவேண்டும்’’ என்றார்.

Tags : Struggle, Capital, Andhra Pradesh
× RELATED ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு...