அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கும் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க 50,000 இந்தியர்கள் முன்பதிவு

ஹூஸ்டன்: அமெரிக்காவில் அடுத்த மாதம் பிரதமர் மோடி பங்கேற்கும், ‘ஹவுடி மோடி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இதுவரை 50 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் அடுத்த மாதம் 27ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். ஐநா கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, ஹூஸ்டன் நகருக்கு அவர் செல்கிறார். அங்கு, முன்னணி இந்திய அமெரிக்க தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு சமூகத்தை சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். பின்னர், அமெரிக்க இந்தியர்களால் நடத்தப்படும், ‘ஹவுடி மோடி’ மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இந்த மாநாடு ஹூஸ்டனின் என்ஆர்ஜி அரங்கில் நடக்கிறது. இதில், பங்கேற்பதற்கான டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. இது, இலவச டிக்கெட் என்ற போதிலும், மோடியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் இதுவரை 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். புதியதாக பதிவு செய்பவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வருகிற 29ம் தேதி வரை பல்கலைக் கழக மாணவர்கள் பதிவு செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு இந்திய பிரதமரின் உரையை கேட்பதற்கு இவ்வளவு அதிகமான பார்வையாளர்கள் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளது இது மூன்றாவது முறையாகும். இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறை உரையாற்றுகிறார். கடந்த 2014ம் ஆண்டு நியூயார்க்கின் மேடிசன் சதுக்கத்தில் இந்திய அமெரிக்கர்களிடையே மோடி பேசினார். 2016ம் ஆண்டு சிலிகான் வேலியில் அவர் உரையாற்றினார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: