டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு திடீரென வந்தார் நான் தலைமறைவாக இருக்கவில்லை : கைதுக்கு முன் சிதம்பரம் பேட்டி

புதுடெல்லி: ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் நேற்றிரவு திடீரென காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. நான் தலைமறைவாகவும் இல்லை’’ என்றார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவிலிருந்து மாயமான ப.சிதம்பரம் எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், 27 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றிரவு திடீரென அவர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்கு பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித் ஆகியோர் உடன் இருந்தனர். சிரித்த முகத்தோடு வந்த ப.சிதம்பரம் தனது பேட்டியில் கூறியதாவது:

ஜனநாயகத்தின் அடிப்படையே சுதந்திரம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். வாழ்வா, சுதந்திரமா இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னால், நிச்சயம் சுதந்திரத்தையே தேர்வு செய்வேன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் எந்த குற்றமும் செய்ததாக நான் குற்றம்சாட்டப்படவில்லை. சிபிஐயோ அமலாக்கத்துறையோ நீதிமன்றத்தில் எனக்கு எதிராக எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. இதைத்தவிர வேறெந்த உண்மையும் இல்லை. ஆனால், சில பொய்யர்களால் திட்டமிட்டு பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன. கடந்த 15 மாதங்களாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் சுதந்திரமாக இருந்தேன். 7 மாத விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் எனது இடைக்கால ஜாமீனை ரத்து செய்துள்ளது. இதைத்தொடர்ந்து நான் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. நான் எங்கும் தலைமறைவாகவில்லை. கடந்த 27 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடந்துள்ளன. வழக்கு தொடர்பாக எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தேன். சீரற்ற கரங்களால் விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டாலும் கூட நான் சட்டத்தை மதிக்கிறேன்.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தலைவணங்குகிறேன். வரும் வெள்ளிக்கிழமை வரையிலும், அதன் பிறகும் நாடு முழுவதும் சுதந்திர ஜோதி ஒளிரும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chidambaram ,Suddenly came , Congress office in Delhi
× RELATED டெல்லி சட்டமன்ற தேர்தலில்...