முன்ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்: காலை முதல் மாலை வரை பரபரப்பு அங்கும் இங்குமாக ஓடிய கபில் சிபல்

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய நேரடி முதலீடு முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்ததை  தொடர்ந்து, அவரை கைது செய்ய சிபிஐ.யும். அமலாக்கத் துறையும் களமிறங்கின. டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் முற்றுகையிட்டு இருந்ததும், சிதம்பரம் கிடைக்கவில்லை.  அவர் தலைமறைவாகி விட்டார்.அதே நேரம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், முன்ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினமே சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன்  கோகாய் மறுத்து விட்டார். இதையடுத்து, சிதம்பரத்தை கைது செய்வதில் சிபிஐ அதிக தீவிரம் காட்டியது.இந்நிலையில், சிதம்பரத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று காலை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், காலை முதலே உச்ச நீதிமன்றம் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும், மூத்த  வழக்கறிஞர்களுமான கபில் சிபல், சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங் மானுவி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் குவிந்தனர். ஆனால், இந்த மனு நேற்றைய வழக்கு விசாரணை பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால்,  ப.சிதம்பரம் தரப்பில்  ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் நீதிபதிகள் என்.வி.ரமணா, சந்தான கவுடர் மற்றும் அஜய் ரஸ்தோகி முன்னிலையில் ஆஜராகி, இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

கபில் சிபல்: சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்த போதெல்லாம்  ப.சிதம்பரம் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் சமூகத்தில் உயர் இடத்தில் இருப்பவர். அதனால், வழக்கிற்காக பயந்து ஓடி ஒளிய  வேண்டிய அவசியம் கிடையாது. இருப்பினும், 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் அவருக்கு மின் அஞ்சல் மூலமாக சம்மன் அனுப்பியும், வீட்டு சுவற்றில் நோட்டீஸ் ஒட்டியும் உள்ளன.  அவரை கைது  செய்யும் நோக்கத்தோடு வீடு வரை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்துள்ளனர். அதனால், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்து,  இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.துஷார் மேத்தா (சிபிஐ வழக்கறிஞர்): ப.சிதம்பரம் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுப்பட்டதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. அவை   நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த மனுவை  அவசரமாக விசாரிக்கக் கூடாது. நீதிபதி என்.வி.ரமணா: இது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்ந்த விவகாரம் என்பதால் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கிறேன். -உடனே, கபில் சிபல், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறைக்கு ஓடினர். ஆனால், விசாரணை அறைக்குள் வந்த தலைமை நீதிபதி, நேரடியாக அயோத்தி நிலப் பிரசனை வழக்கை விசாரிக்க தொடங்கி  விட்டார். இதனால், எதுவும் பேசாமல் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் அனைவரும் அறையை விட்டு வெளியே வந்து விட்டனர்.

பின்னர், கபில் சிபல் உள்ளிட்டோர் மதிய உணவிற்கு பிறகு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நீதிபதி என்.வி.ரமணா அமர்வின் முன்னிலையில் ஆஜராகினர்.கபில் சிபல்: அயோத்தி நிலப் பிரசனை வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  உள்ளதால் அவரிடம் எங்கள் கோரிக்கையை முறையிட முடியவில்லை. அதனால், நீங்களே எங்கள் கோரிக்கையை  ஏற்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியே கிடையாது.நீதிபதி ரமணா: நீங்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் பிழை உள்ளதால் அது நிராகரிக்கப்பட்டு உள்ளது.நீதிமன்ற பதிவாளர் அலுவலக அதிகாரி: மனுவில் பிழை இருந்தது உண்மைதான். தற்போது, அது திருத்தப்பட்டு விட்டது. நீதிபதி ரமணா: இந்த வழக்கை விசாரிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து தலைமை நீதிபதியே எதுவும் கூறாத நிலையில், நான் எப்படி உங்கள் கோரிக்கையை ஏற்று விசாரணை நடத்த முடியும்? மேலும், நீங்கள் தாக்கல் செய்துள்ள  மனுவில் பிழைகள் உள்ளன. பின்னர், அவை திருத்தி தாக்கல் செய்யப்பட்டது என்றாலும் கூட, நீதிமன்றத்தின் இன்றைய வழக்கு விசாரணை பட்டியலில் உங்கள் மனு இடம் பெறவில்லை. இது போன்ற சூழலில் வழக்கை விசாரிப்பது என்பது  நீதிமன்ற மரபையும், விதிகளையும் மீறும் செயலாகும். அதனால், வழக்கு விசாரணை பட்டியலில் உங்கள் மனு இடம் பெறாத வரையில், இந்த வழக்கை விசாரிக்கவோ அல்லது அதன் மீது இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவோ இயலாது.

இதை கேட்டதும் கபில் சிபல் உள்்ளிட்டோர் செய்வது அறியாமல் திணறினர். இதனால், வேறுவழியின்றி நேற்று மாலை 4 மணியளவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் முறையிட அவர்கள் திட்டமிட்டனர். ஆனால், அயோத்தி  வழக்கை முடித்து விட்டு தலைமை நீதிபதி தனது அறைக்கு சென்று விட்டார். இதனால், அவரிடம் முறையிட முடியாமல் கபில் சிபல் உள்ளிட்டோர் சோர்ந்தனர். கடைசி வரை அவர்களால் இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்து  வர முடியவில்லை. இந்த வழக்கின் காரணமாக, உச்ச நீதிமன்ற வளாகமே நேற்று காலை முதல் மாலை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

சிபிஐ கேவியட் மனு
உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற ப.சிதம்பரம் முயன்று வரும் நிலையில், அதை தடுப்பதற்காக சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்தன. அதில், ‘ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவின் மீதான  விசாரணையின்போது, எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது,’ என கூறப்பட்டுள்ளது. இதனால், சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.Tags : forerunner, Supreme Court ,Denied:, there
× RELATED டெல்லி வன்முறை தொடர்பாக நண்பகல் 12.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்