ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங். தலைவர்கள் ஆதரவு: ‘அதிகார துஷ்பிரயோகம், வெட்கக்கேடானது’ என கருத்து

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும்,  வெட்கக்கேடானது என்றும் ராகுல், பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து, அவரை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், இவற்றிடம் சிக்காமல் சிதம்பரம் தலைமறைவாகி விட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, 2 மத்திய  அமைப்புகளும் தேடி வருகின்றன.இவற்றின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று வெளியிட்ட  டிவிட்டர் பதிவில், ‘ப.சிதம்பரத்தின் நற்பெயரை படுகொலை செய்ய  அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் முதுகெலும்பில்லாத சில ஊடகங்களை மோடி அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்,’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மிகவும் தகுதி வாய்ந்த, மரியாதைக்குரிய மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் நாட்டுக்காக  சேவை புரிந்தவர். எந்த தயக்கமுமின்றி உண்மையை பேசும் ஆற்றல் கொண்ட அவர், அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியவர். ஆனால், அந்த உண்மைகளை கோழைகளால் பொறுக்க முடியவில்லை. இதனால், அவர் வேட்டையாட  துரத்தப்படுவது வெட்கக்கேடானது. அவருக்கு கட்சி துணை நிற்கும். உண்மைக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். இதனால் ஏற்படும்எந்த விளைவுகளையும் சந்திக்க தயார்,’ என்று கூறியுள்ளார்.

காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவை புரிந்தவர் ப.சிதம்பரம். அவருக்கு நாங்கள் துணை நிற்போம்,’ என பதிவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில்,  ‘‘இந்தியாவை போலீஸ் நாடாக நடத்திக் கொண்டிருக்கும் மோடி அரசு, மோசமான அரசியல் பழிவாங்கும் அரசுக்கு உதாரணமாக திகழ்கிறது. 7 மாதத்திற்கு தீர்ப்பை ஒத்திவைக்கும் நீதிபதிகள், ஓய்வு பெறப் போகும் 72 மணி நேரத்துக்கு முன்பாக தீர்ப்பு அளிக்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சரை வேட்டையாட அமலாக்கத் துறையும், சிபிஐ.யும் ஏவப்படுகின்றன. இதுவா  குடியரசு?,’’ என்றார்.மற்றொரு செய்தித் தொடர்பாளரான ஆனந்த் சர்மா, ‘‘ப.சிதம்பரத்துக்கு எதிரான நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்படுவதாகும். பாஜ.வின் முதல்வர்கள் உட்பட பல அமைச்சர்கள் மீதான கடுமையான  குற்றச்சாட்டுகளில் எல்லாம் விசாரணை அமைப்புகள் மவுனம் காக்கின்றன. இந்த இரட்டை நிலைப்பாடு, நாட்டிற்கு நன்மதிப்பை தராது. உகந்த நேரத்தில் சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார். உச்ச நீதிமன்ற விசாரணைக்காக  நாளை வரை அரசு காத்திருக்க வேண்டும்,’’ என்றார்.

லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
முன்ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 4 முறை வந்து சென்றனர். இதுவரை சிதம்பரம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
எனவே, அவர் வெளிநாடு தப்பி ஓடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீசை நேற்று பிறப்பித்தது. இதன் மூலம், அமலாக்கத்துறையின் அனுமதியின்றி விமானம், கப்பல் என எந்த வழியிலும் ப.சிதம்பரம்  வெளிநாடு தப்ப முடியாது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
டெல்லியில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறேன். 2008ல் நடந்த ஒரு சம்பவத்துக்கு இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்ன? ஜோடிக்கப்பட்ட வழக்கில் எனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

10 ஆண்டு சபதத்தை நிறைவேற்றிய அமித்ஷா
கடந்த 2010ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, போலி என்கவுன்டர் வழக்கில் குஜராத் அமைச்சராக இருந்த அமித்ஷா கைது செய்யப்பட்டார். இது அமித்ஷாவின் அரசியல் வாழ்க்கையில் பெரும் கரும்புள்ளியாக  மாறியது. அந்த அவப்பெயரை துடைக்க அமித் ஷாவும், மோடியும் பெரும் பாடுபட்டனர். இதனால், மத்தியில் பாஜ ஆட்சி அமைந்ததுமே ப.சிதம்பரத்தை குறிவைக்கத் தொடங்கி விட்டார் அமித்ஷா.
சாதகமான சூழலுக்காக காத்திருந்த அவர், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளில் தனக்கு நம்பகமான தலைமை வந்ததும் சிதம்பரத்திற்கு எதிரான ஆபரேஷனை தொடங்கினார். சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது இருந்த விசாரணை  அமைப்புகளின் குறி, ப.சிதம்பரத்தின் மீது திரும்பியது. அமித்ஷா உள்துறை அமைச்சரானதுமே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விரைவுபடுத்தி, தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். தனது 10 ஆண்டு சபதத்தை அமித்ஷா நிறைவேற்றி  இருக்கிறார்.

நிர்மலாவையும் பகைத்துக் கொண்டவர்
நிதி அமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் ப.சிதம்பரம், பட்ஜெட்டில் உள்ள பல்வேறு  குறைகளை தெரிவித்தார். பின்னர் பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமன் 112 நிமிடங்கள் பேசினார். அதில் சிதம்பரத்தின் கேள்விகளுக்கு மட்டுமே அவர் சுமார் 50 நிமிடங்களை ஒதுக்கினார். மேலும், தற்போதைய பொருளாதார மந்த நிலை  குறித்தும் சிதம்பரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நிதி அமைச்சகத்தின் செயல்பாடுகளின் குறைபாட்டையும் அவர் எடுத்து கூறியது, அமைச்சர் நிர்மலாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தற்போது  அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.Tags : Rahul ,Priyanka,support, shame
× RELATED சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா...