×

மேலும் 4 நிறுவனங்களுக்கு முறைகேடாக அந்நிய முதலீடு புதிய குற்றச்சாட்டுகள்: கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: ப.சிதம்பரம் தனது பதவிக் காலத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் -மேக்சிஸ் தவிர, மேலும் 4 நிறுவனங்களுக்கு மோசடியாக அந்நிய முதலீடு பெறச் செய்து, பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக அமலாக்கத் துறை புதிய  குற்றச்சாட்டை கூறியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுக்கு அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்கு முறைகேடாக உதவி செய்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின்  மீது சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்–்கில் சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இவர் மீது அமலாக்கத் துறை மேலும் பல  முறைகேடு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது:அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் முறைகேடுகளை தவிர, மேலும் 4 நிறுவனங்களுக்கு அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற்றுத் தந்து ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, டியாஜியோ ஸ்காட்லாந்து லிமிடெட், கதாரா ஹோல்டிங்ஸ், எஸ்ஸார் ஸ்டீல் லிமிடெட், எல்போர்ஜ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள்  முறைகேடாக அந்நிய முதலீடு பெற்றுள்ளன.

இதன் மூலம், கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இந்த லஞ்சப் பணம் முழுவதும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கார்த்தி சிதம்பரம் பெயரில் உள்ள போலி நிறுவனங்கள் மூலமாக சிதம்பரம் குடும்பத்தினர் பெயருக்கு  மாற்றப்பட்டுள்ளது. இதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சுமார் 24 வங்கி கணக்குகளை தொடங்கி அதில் லஞ்ச பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். அந்த பணத்தை சிதம்பரம் குடும்பத்தினர் தங்களின் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும், அந்த லஞ்சப் பணம் மூலம் மலேசியா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். பனாமா பேப்பர்ஸ் லீக்ஸ் மூலம் கிடைத்த தகவலின்படி, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் உள்ள ஒரு  நிறுவனத்தின் மூலம் மட்டுமே கார்த்தி சிதம்பரத்திற்கு ரூ.300 கோடி வரை தரப்பட்டுள்ளது. இதுதவிர, மற்றொரு போலி நிறுவனத்தின் பங்குதாரர்கள், இயக்குநர்கள் அனைவரும் அந்நிறுவனத்தின் மொத்த பணத்தையும் சிதம்பரத்தின்  பேத்தியான, கார்த்தி சிதம்பரத்தின் மகளுக்கு வழங்கி உள்ளனர். இதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஏற்கனவே ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள இந்த புதிய குற்றச்சாட்டுகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சிதம்பரத்தின் மீதான பிடியை  அமலாக்கத் துறையும், சிபிஐ.யும் இறுக்கியுள்ளன.

‘விசாரணை நடத்தினால்திடுக்கிடும் உண்மை வரும்’
அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘‘ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருக்கின்றன. இதைப் பற்றி அவர்களிடம் முறையான விசாரணை  நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் தெரியவரும். எனவே, அமலாக்கத் துறையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தும் பட்சத்தில், ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்  மேக்சிஸ் தவிர மற்ற 4 நிறுவனங்கள் தொடர்பான மோசடி குறித்த தகவல்களும் அம்பலமாகும்,’’ என்றனர்.

Tags : illegally , New allegations, Department ,Information
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...