மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையா தான் காரணம்: மனம் திறந்தார் தேவகவுடா

பெங்களூரு: கர்நாடக முதல்வராக குமாரசாமி இருப்பதை சகித்து கொள்ள முடியாத  சித்தராமையா, தனது ராஜதந்திரம் மூலம் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை  கவிழ்க்க காரணமாக இருந்தார் என்று முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான  எச்.டி.தேவகவுடா குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தில் மஜத-காங்கிரஸ்  கூட்டணி ஆட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலமில்லாமல் ஆட்சி இழந்து  இன்றுடன் ஒருமாதம் முடிகிறது. இதுவரை ஆட்சிக் கலைப்பு தொடர்பாக எந்த  கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்த முன்னாள் பிரதமரும், மஜத தேசிய  தலைவருமான எச்.டி.தேவகவுடா, முதல் முறையாக தனியார் செய்தி நிறுவனம்  ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
கடந்தாண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம்  கிடைக்காத நிலையில் பாஜ தலைமையில் ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற  நோக்கத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் முடிவை காங்கிரஸ்  தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எடுத்தனர். காங்கிரஸ்  தலைவர்கள் எடுத்த முடிவை சித்தராமையாவால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

அதே சமயத்தில் குமாரசாமி முதல்வர் பதவி வகித்ததை அவரால் சகித்து  கொள்ள முடியவில்லை. மேலும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட அவர்  தோல்வியடைந்தார். மஜத வேட்பாளர் அவரை தோற்கடித்ததும் கோபத்திற்கு  காரணமாகியது. குமாரசாமி மீது சித்தராமையாவுக்கு கோபம் ஏற்பட பல  காரணங்கள் உள்ளது. கடந்த 2004ல் நடந்த சட்டபேரவை தேர்தலில் எந்த  கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி  ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது முதல்வர் பதவியை மஜதவுக்கு  பெற்று தனக்கு வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். காங்கிரஸ் அதிகம்  உறுப்பினர்கள் கொண்டிருந்ததால் முதல்வர் பதவியை அக்கட்சிக்கு கொடுத்துவிட்டு  சித்தராமையாவை துணைமுதல்வர் ஆக்கினேன். ஆனால் முதல்வர் பதவிக்கு வருவதை நான்  தடுத்து விட்டதாக கோபம் கொண்டார். அப்போதிலிருந்தே மஜதவை பலவீனப்படுத்த  அஹிந்தா அமைப்பை கையில் எடுத்தார். காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி  கவிழ்ந்தபின் மஜத வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அஹிந்தா  அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இந்நிலையில்  பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து  குமாரசாமி முதல்வராகியது சித்தராமையாவால் பொறுத்து கொள்ள முடியவில்லை.  ஆட்சியை கவிழ்க்க அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் ரகசியமாக முயற்சி  மேற்கொண்டு வந்தார். கடந்த மே மாதம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்  மண்டியா தொகுதியில் எனது பேரன் தோல்வியடைய அவர் தான் காரணம். அவரது  ஆதரவாளர்களை சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதாவுக்கு ஆதரவாக பணியாற்ற  செய்தார். இதை மண்டியா மாவட்ட காங்கிரஸ் தலைவர்களே  பகிரங்கப்படுத்தியுள்ளனர். குமாரசாமி ஆட்சியை கவிழ்த்துவிட்டு,  எடியூரப்பாவை முதல்வராக்கி, அவர் எதிர்க்கட்சி தலைவராக வரவேண்டும் என்று  விரும்பினார். அதற்காக அவரது ஆதரவு எம்எல்ஏக்களை பகடை காயாக பயன்படுத்தி  வெற்றி கண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

Tags : MJT, Congress, Siddaramaiah, Devakauda
× RELATED மத்திய பட்ஜெட்டின் முக்கியத்துவம்...