பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தபோது சம்பவம் நாகை எம்.பி கார் மீது கத்தி வீசிய 3 பேருக்கு வலைவீச்சு

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராஜ் மீது கத்தி வீசிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த மே மாதம் நடந்த நாகை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில தினங்களாக இவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து திறந்த ஜீப்பில் புறப்பட்ட இவர், கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் நன்றி தெரிவித்தார். இரவு 8 மணியளவில் அகஸ்தியன்பள்ளி காளியம்மன் கோயில் அருகில் திறந்த ஜீப்பில் நின்றபடி ஒலிபெருக்கியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிக்கொண்டிருந்தார்.  

கூட்டத்தில் இருந்த அதே பகுதியை சேர்ந்த அப்பு, லோகு, லட்சுமணன் ஆகிய 3 பேரும், ‘‘இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நன்றி கூற வந்தது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர் 3 பேரில் ஒருவர், சிறிய கத்தியை எம்பி செல்வராஜ் மீது வீசினார். இதில் அந்த கத்தி செல்வராஜ் மீது படாமல், ஜீப்பின் முன் பகுதியில் பட்டு கீழே விழுந்தது. கத்தி வீசிய நபரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பிடிக்க முயன்றனர். ஆனால் 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். எம்.பி மீது கத்தி வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் நேற்று வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: