கஞ்சன்ஜங்கா உட்பட இமயமலையின் 137 சிகரங்களுக்கு வெளிநாட்டினர் செல்ல அனுமதி: விதிமுறையை எளிதாக்கியது மத்திய அரசு

புதுடெல்லி: கஞ்சன்ஜங்கா உட்பட இமயமலையின் 137 சிகரங்களுக்கு மலையேற்றம் செல்வதற்கு வெளிநாட்டினருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டினர் மலையேற்றத்தில் ஈடுபட வேண்டும் என்றால், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே, அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட முடியும். ஆனால், அரசு இந்த நடைமுறையை தற்போது எளிதாக்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மலையேற்றம் செல்ல விரும்பும் வெளிநாட்டினர் நேரடியாக இந்திய மலையேற்ற அமைப்பிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். சுற்றுலாத்துறையின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள துனாகிரி (7066 மீ), ஹர்டியோல் (7151 மீ), சிக்கிமில் 7000 மீட்டர் உயரத்தில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு காப்ரு சிகரம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கைலாச மலை (6400 மீ), இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் முல்கிலா (6571 மீ) உள்ளிட்ட சிகரங்கள் இந்த பட்டியிலில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் கூறுகையில், “அரசின் இந்த நடவடிக்கை சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை,” என்றார். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் சிக்கிமில் உள்ள 137 சிகரங்கள், வெளிநாட்டினர் மலையேற்றத்துக்காக அனுமதிக்கப்படுகிறது. உத்தரகாண்டில் 51, சிக்கிமில் 24, ஜம்மு காஷ்மீரில் 15, இமாச்சலப் பிரதேசத்தில் 47 சிகரங்கள் அமைந்துள்ளன. சாட்டிலைட் போனை பயன்படுத்துவதற்கு தொலைத் தொடர்பு துறையிடம் இருந்து முன்அனுமதி பெற வேண்டும். சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும், உள்ளூர் அமைப்புகளுடன் பகிரப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையை தவிர வேறு பாதையில்  செல்லக்கூடாது மற்றும் புகைப்படம் எடுக்க கூடாது,’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: