உபி. அமைச்சரவை விரிவாக்கம் 18 புதிய முகங்களுக்கு பதவி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களாக 18 பேர் பதவியேற்றனர். இதன் மூலம், அமைச்சரவை பலம் 56 ஆக உயர்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், உபி அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 18 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே இணை அமைச்சர்களாக இருந்த 4 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம், நேற்று 23 பேர் பதவியேற்றனர்.

ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில், புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய முகங்களான ராம் நரேஷ் அக்னி கோத்ரி, கமலா ராணி வருண் ஆகியோருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 6 பேர் அமைச்சர்களாகவும், 10 பேர் இணை அமைச்சர்களாகவும் (தனி பொறுப்பு) பொறுப்பேற்றனர். அமைச்சர்கள் பதவியேற்ற போது `ஹர ஹர மகாதேவ்’, `பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கங்கள் ராஜ்பவனில் விண்ணை பிளந்தன. இந்த விரிவாக்கத்தின் மூலம், 43 ஆக இருந்த யோகியின் அமைச்சரவை பலம் 56 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், உபி.யில் மொத்தம் 60 அமைச்சர்கள் வரை நியமிக்கப்படலாம்.

அமைச்சரவை விரிவாக்கத்துக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிலையில், தள்ளி போடப்பட்டு நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு, புதிய அமைச்சர்களுக்கு வழி விடுவதற்காக 5 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Related Stories: