கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் எம்.பி.ஏ கலந்தாய்வு இன்று துவக்கம்

கோவை:  தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் 23 ஆயிரம் எம்.பி.ஏ, எம்.சி.ஏ இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிக்க விரும்பிய 8,032 மாணவர்களுக்கு மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. எம்.பி.ஏ, எம்.சி.ஏ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 17ம் தேதி தொடங்கி நேற்று வரை எம்.சி.ஏ பிரிவிற்கு கலந்தாய்வு நடந்தது. இதற்கான துணை கலந்தாய்வு நேற்று நடந்து முடிந்தது. இதில் 11 பேர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து எம்.சி.ஏ கலந்தாய்வு முடிவுற்றது. இந்த நிலையில், எம்.பி.ஏ படிப்பிற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

சிறப்பு வகுப்பினருக்கான இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள 14 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 13 பேர் கலந்து கொண்டு கல்லூரி இணைப்பு கடிதம் பெற்றனர். தொடர்ந்து இன்று எம்.பி.ஏ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் பழனி கூறுகையில், ‘‘கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடக்கும் எம்.பி.ஏ முதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள 696 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடக்க உள்ளது.’’ என்றார்.கலந்தாய்வு குறித்த தகவல்களை www.gct.ac.in, www.tnmbamca.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: