வழக்கில் ஆஜராக வந்தபோது பழி தீர்த்த கும்பல் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சக்கண்ணன். இவரது 3வது மகன் சிவகுமார் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2003ம் ஆண்டு வெங்கடேஷ் பண்ணையாரின் ஆதரவாளரான கோரம்பள்ளத்தை சேர்ந்த ஆத்திப்பழம் என்பவர் சோரீஸ்புரம் செங்குளத்தில் கொன்று புதைக்கப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சிவகுமார் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி 2வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இறுதிக்கட்ட விசாரணைக்கு தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று சிவகுமார் புறப்பட்டார். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே தனது அண்ணன் வக்கீல் முத்துக்குமாரின் அலுவலகத்தில் இருந்து, தென் பாகம் காவல்நிலையத்தின் பின்புறம் கோர்ட்டுக்கு செல்லும் சிறிய சந்து வழியாக சிவகுமார் செல்ல முயன்றார். அவர் ரோட்டை கடக்கும் போது அங்கு 3 பைக்குகளில் வந்த கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக அரிவாள் மற்றும் வாளால் வெட்டித் தள்ளியது. இதில் அவருக்கு தலை, கழுத்து, முதுகு பகுதிகளில் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் சரிந்தார்.

பட்டப்பகலில் கோர்ட் மற்றும் காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கும்பல் பைக்குகளில் ஏறி தப்பியது. உடனடியாக வக்கீல் ராம்குமார், தம்பி சிவகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் இறந்தார். தென்பாகம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.  கொலை நடந்த இடம் முக்கிய சாலை என்பதால் அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில், பண்ணையாரின் ஆதரவாளரான ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்க சிவகுமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடையதாக கருதப்படும் ராஜேஷ், பீட்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: