தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலை சென்றபோது செல்போனில் பேசியபடி பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்

சேலம்: செல்போனில் பேசியபடியே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு பஸ்களில் டிரைவர்கள் செல்போன் பேசியபடி பஸ்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதன்படி, சேலம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், இதனை கண்காணிக்க போக்குவரத்து கழகங்கள் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அனைத்து பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். இந்நிலையில், தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு கடந்த 8ம் தேதி அரசு பஸ்சை அரூரை சேர்ந்த டிரைவர் மதிவாணன் ஓட்டிச் சென்றார்.  பஸ் அரூர் அருகே சென்ற போது, செல்போனில் பேசியபடியே டிரைவர் இயக்கியதை கண்காணிப்பு குழு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுபற்றி சேலம் கோட்ட போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து டிரைவர் மதிவாணனை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘செல்போனில் பேசியபடி பஸ்சை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிரைவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுவின் சோதனையில், இந்த மாதம் செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய 3 டிரைவர்கள் சிக்கினர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்,’’ என்றனர்.

Related Stories: