×

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தது ஈரோடு வழியாக நாளை முதல் வழக்கம்போல் ரயில்கள் இயங்கும்: அதிகாரிகள் தகவல்

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், நாளை (22ம்தேதி) முதல் ரயில்கள் வழக்கம் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஈரோடு ரயில் நிலையம் இயங்கி வருகிறது. ஈரோடு ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் உள்ளன. இதில் தினமும் 100க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் வந்து செல்கின்றன. இதுதவிர ஏராளமான சரக்கு ரயில்களும் ஈரோடு மார்க்கமாக இயக்கப்படுகிறது.
இந்தநிலையில், ஈரோடு ரயில் நிலையத்தில், புதிய தொழில்நுட்ப பணிகள், பராமரிப்பு பணிகள் கடந்த 17ம் தேதி தொடங்கியது. பழைய தண்டவாளங்களை மாற்றி அமைப்பது, மின்சார ரயில்கள் செல்லும் பாதையில் மின் கேபிள்களை மாற்றுவது, சிக்னல்களை நவீனமாக்கி புதிய சாப்ட்வேர் மூலம் தானியங்கி முறையில் இயக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த 17ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு ஈரோடு ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் மன்னார்குடி- கோவை, கோவை- ராமேஸ்வரம், மங்களூர்- சென்னை எழும்பூர், பாலக்காடு- திருச்சி, ஈரோடு- திருச்சி போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் பாசஞ்சர் ரயில்களும், கோவை, கேரளா, சென்னை போன்ற பெருநகரங்களில் இயக்கப்படும் ரயில்களும் ஈரோட்டை தவிர்த்து மாற்று வழிப்பாதையில் இயக்கப்பட்டு வந்தன.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில் ரத்து அல்லது மாற்று வழியில் இயங்குவது தொடர்பாக முன்கூட்டியே எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் இன்றுடன் (21ம் தேதி) நிறைவடைகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- ஈரோடு ரயில் நிலைய பிளாட்பாரங்களின் தண்டவாளங்கள் சந்திக்கும் பகுதியில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தண்டவாளங்களை புதுப்பித்தல், சிக்னல்களை சீர்செய்து அமைத்தல் போன்ற பணிகள் நடந்தன. இப்பணிகள் திட்டமிட்டப்படி இன்றுடன் (21ம் தேதி) நிறைவடைகிறது. எனவே நாளை (22ம் தேதி) முதல் ஈரோடு மார்க்கமாக சென்று வந்த அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Maintenance work, Erode, trains running
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...