×

கல்லல் அருகே மின்னல் தாக்கியதில் கோயில் கோபுரத்தில் விரிசல்

சிவகங்கை: கல்லல் அருகே மின்னல் தாக்கியதில் பாகனேரியில் உள்ள புல்வநாயகி அம்மன் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு, சிற்பங்கள் சேதமடைந்தன. சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பாகனேரியில் பிரசித்தி பெற்ற புல்வநாயகி அம்மன் கோயில் உள்ளது. நேற்று மாலை பாகனேரியில் ஒரு மணி நேரம் வரை கனமழை பெய்தது. மழை பெய்த போது புல்வநாயகி அம்மன் கோயில் மூலஸ்தானத்தின் மேல் உள்ள கோபுரத்தின் மீது பலத்த சத்தத்துடன் மின்னல் இறங்கியது. கோயிலில் இருந்த பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் மண்டப பகுதியில் இருந்தனர். இதனால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பின்னர் கோயில் பணியாளர்கள் கோபுரம் அருகே சென்று பார்த்தனர். மின்னல் தாக்கியதில் கோபுரத்தில் ஆங்காங்கே லேசான விரிசல்கள் விழுந்திருந்தன. கோபுரத்தின் வடக்கு பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உடைந்து கீழே விழுந்திருந்தன. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பக்தர்கள் கூறுகையில், ‘‘மூலஸ்தான கோபுரத்தில் மின்னல் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபுர சிற்பங்கள் உடைந்ததால் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கோபுரத்தில் இடிதாங்கி உள்ளதா, இல்லையெனில் ஏன் வைக்கப்படவில்லை என பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags : Stones, lightning strikes, cracks in the temple tower
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...