தனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்: லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு..!

சென்னை: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 4,500 லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை புறநகர் பகுதியான வேளச்சேரி, பள்ளிக்கரணை, கந்தன்சாவடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், படூர், தாழம்பூர், சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதிகளில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்களுக்கும், இப்பகுதிகளில் உள்ள சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் திருப்போரூர், தண்டலம், சிறுசேரி, தாழம்பூர், நாவலூர், இள்ளலூர், பொன்மார், பனங்காட்டுப் பாக்கம், வெண்பேடு, காயார், ஆலத்தூர், பையனூர் ஆகிய இடங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காயார் காவல் நிலையத்தில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுத்ததாக கூறி தண்ணீர் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை கண்டித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை கண்டித்தும், நிலத்தடி நீரை கனிம வளத்தில் இருந்து நீக்கக் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று காலை டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

லாரி உயிமையாளர்களுடன் குடிநீர் வாரிய இயக்குனர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து போராட்டம் தொடரும் என என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வாபஸ் அறிவித்துள்ளனர்.

Related Stories: