சென்னையிலேயே தயாராகிறது காஷ்மீரத்து கம்பளம்!

சென்னை மாநகரின் பரபரப்பான நுங்கம்பாக்கம் சாலையில் இருக்கிறது அந்த அடுக்குமாடிக் கட்டிடம். அதனுடைய கீழ்த்தளத்தில் நகரத்தின் சந்தடிக்கு சற்றும் தொடர்பில்லாமல் ஒருவர் தறி நெய்துக் கொண்டிருக்கிறார்.அவருக்கு உதவியாக ஒரு பெண்.‘காஸ்மோபாலிட்டன் நகரத்தில் தறி நெய்யும் நெசவாளியா?’ என்கிற ஆச்சரியத்தோடு அவரிடம் பேசினோம்.“நான் நெய்வது புடவை அல்ல. கார்ப்பெட். புடவை என்றால் ஓரிரு நாட்களில் முழுமையாக நெய்துவிடலாம். கைத்தறியாக ஒரு கார்ப்பெட் நெய்வதற்கு சில மாதங்கள் ஆகும்” என்கிறார் ஜீஷான் தாரிக். உடனிருக்கும் பெண் அவரது தங்கை நிஷா தாரிக்.“எங்க தாத்தா காலத்திலிருந்தே கார்ப்பெட் நெய்வதுதான் எங்களுக்கு தொழில். இப்போ மூணாவது தலை முறையா நாங்களும் அதே தொழிலை பெரும் சிரமங்களுக்கு இடையேசெய்கிறோம்” என்றார் நிஷா.அண்ணனும், தங்கையும் பொறுமையாக நம்முடைய சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தொடங்கினார்கள்.

“பொதுவா கம்பளங்கள் நெய்வது வடநாட்டில்தானே?”

“உண்மைதான். எங்க தாத்தா, காஷ்மீர்காரர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இந்த தொழிலை செய்து வந்தார். அப்போதான் இந்தியா பாகிஸ்தான் என்ற பிரிவினை எல்லாம் இல்லையே. அதனால் தாத்தா, காஷ்மீரில் இருந்து ஷால்களை வாங்கி, பாகிஸ்தானில் அதை கொடுத்து அதற்கு பதிலாக கார்ப்பெட் வாங்கி வருவார். அதனை இங்கு விற்று தொழில் செய்து வந்தார். தாத்தாவின் காலத்திற்கு பிறகு அப்பா இந்த தொழிலை தன் கையில் எடுத்துக் கொண்டார். அப்பா காஷ்மீரில் இருந்த சென்னைக்கு 35 வருடங்களுக்கு முன்பே வந்து செட்டிலாயிட்டார். இங்கு தான் இதனை முழுமையாக செய்து வந்தார். நாங்க ரெண்டு பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறோம்”

ஜீஷான் தாரிக், அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. அவர் எப்படி இந்தப் பாரம்பரியத் தொழிலுக்கு வந்தார் என்று கேட்டோம்.-‘‘நான் பொறியியல் படிப்பை முடிச்ச கையோடு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். ஒரு முறை விடுமுறைக்காக நான் காஷ்மீர் சென்று இருந்தேன். எங்களின் தொழிலும் காஷ்மீர் சார்ந்து இருந்ததால், அப்பா அங்கு கார்பெட் குறித்து பார்த்து வரச்சொன்னார். அங்கு சில கார்பெட்களை ஆர்டரும் கொடுத்து இருந்தார். அது குறித்தும் விவரம் பார்த்து வரச்சொன்னார். அப்பா சொன்னது போல் நான் கார்ப்பெட் நெசவு செய்யப்படும்  இடத்திற்கு நேரடியாக சென்று பார்த்த போது என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. அங்கு நெய்யப்பட்டு இருந்த ஒவ்வொரு கார்பெட்களும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. ஒவ்வொன்றும் ஒரு விதமாக ஜொலித்தது. ஒரு டிசைனை மற்ற கார்ப்பெட்டில் பார்க்க முடியாது. ஒவ்வொண்ணும் தனித்துவம்.

அது நாள் வரை கார்ப்பெட் என்னை பொருத்தவரை எங்களின் குடும்ப தொழிலாக தான் எனக்கு தெரியும். ஆனால் அங்கு நெசவாளிகளை பார்த்த அடுத்த நிமிடம் என்னுடைய எண்ணம் எல்லாம் முற்றிலுமாக மாறியது. நாம் காலில் போட்டு மிதிக்கப்படும் இந்த கார்ப்பெட்டுக்கு பின் எவ்வளவு கலை அம்சம் உள்ளது என்பதை நான் அன்று தான் புரிந்து கொண்டேன்.ஒரு கார்ப்பெட்டை நெசவாளிகள் நெய்ய மாசக்கணக்கில் ஆகும். இயந்திர வேலைப்பாடு எதுவுமே கிடையாது. கைகளால் தான் ஒரு இடத்தில் அமர்ந்து அதனை நெய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இடுப்பு மற்றும் கண் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படும். இவ்வளவு நேர்த்தியான வேலைப்பாடு பற்றி யாருக்கும் தெரியவில்லை.

மேலும் அவர்களின் வேலைக்கான ஊதியமும் சரிவர கிடைப்பதும் இல்லை. அதனால் இவர்களுக்கு ஏதாவது என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைச்சேன். உடனே என் சகோதரி நிஷாவிடம் பேசினேன். அவள் அப்போது அமெரிக்காவில் வசித்து வந்தாள். அங்க அவளும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தாள். நான் சொன்னதும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாள். நம்மிடம் தொழில் இருக்கும் போது, நாம் ஏன் மற்றவர்களுக்கு வேலைப் பார்க்க வேண்டும் என்று எங்க இருவருக்கும் தோன்றியது. எனக்கும் அது சரின்னு தோணவே இருவரும் சேர்ந்தே இந்த தொழிலில் இறங்க முடிவு செய்தோம்.’’

‘பிராஜக்ட் ஹாட்’ என்கிற திட்டத்தை நிஷா முன்னெடுத்திருக்கிறார். அதென்ன திட்டம் என்று அவரிடம் பேசினோம்.‘‘கார்ப்பெட், காஷ்மீர் மற்றும் மத்திய இந்தியாவில் தான் பிரபலம். இன்றும் அங்கு இதனை கைகளால் தான் நெய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அவர்களின் வளர்ச்சிக்காக ஆரம்பித்தது தான் ‘பிராஜக்ட் ஹாத்’ திட்டம். இந்த திட்டம் மூலம் நெசவாளர்களுக்கு ஒரு தரமான வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று திட்டமிட்டோம். இப்போது இந்த திட்டத்தின் கீழ் 650 நெசவாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் எங்களின் கடையில் எப்போதும் இருப்பார். அவருக்கு மாச சம்பளம் போல் நாங்க கொடுத்து வருவதால், அவர் காஷ்மீரில் இருந்து குடும்பத்துடன் இங்கு செட்டிலாயிட்டார்.

மேலும் கம்பளம் நெய்வதற்கான தறியும் இங்கேயே எங்க கடையில் அமைத்து இருக்கிறோம். கடைக்கு வருபவர்களுக்கு இது கார்ப்பெட் என்று மட்டும் இல்லாமல், இதன் பின்னால் இருக்கும் உழைப்பும் இவர் மூலம் தெரிய வரும். மேலும் கார்ப்பெட்டினை அமர்ந்து நெய்யும் போது அவர்களின் முதுகுதண்டில் பாதிப்பு ஏற்படும். அதற்காகவே அவர்களுக்கு ஸ்பெஷல் குஷன் கொண்ட இருக்கையை அமைத்து இருக்கிறோம். இதன் மூலம் அமர்ந்து வேலை செய்தாலும், முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்படாது. பார்க்கும் போது சாதாரண தரையில் விரிக்கப்படும் கார்ப்பெட் என்று தோன்றும். ஆனால் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தால் தான் அதில் உள்ள கலைத்திறனை நாம் ரசிக்க முடியும்.

கார்ப்பெட் தொழில் சரிந்து வருகிறது. அந்த கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அதை முற்றிலும் அழியாமல் இருக்கத்தான் ‘பிராஜக்ட் ஹத்’ துவங்கினோம். எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அவர்களின் தேவை என்ன என்று தெரிந்துக் கொண்டு உதவி வருகிறோம். எங்களுக்காகவே மட்டும் இப்போது காஷ்மீரில் இருந்தும் பலர் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லாரும் இப்போது இருக்கும் தலைமுறை தான். அவர்களின் அடுத்த தலைமுறையினர் யாரும் இந்த தொழிலில் இல்லை. அவர்கள் கல்லூரி முடித்துவிட்டு நிரந்தர வருமானத்திற்காகவே வேறு ஏதாவது ஒரு வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள துவங்கிவிட்டனர். இந்தப் போக்கு வருத்தமளிக்கக் கூடியதாக உள்ளது. இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்கள் கவனிக்க வேண்டுமே... அதனால் தான் இருக்கும் நெசவாளர்களுக்கு எங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து வருகிறோம்.”

“உங்க கார்ப்பெட்டுகளில் என்ன ஸ்பெஷல்?” என்கிற கேள்விக்கு ஜீஷான் விடையளிக்கத் தொடங்கினார்.‘‘அப்பா முதலில் சென்னையில்தான் இதனை ஆரம்பித்தார். அதன் பிறகு நாங்க தலையெடுத்தவுடன் பெங்களூர், ஐதராபாத் மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் எங்களுடைய ‘ரக் வீவ்’வின் கிளைகளை ஆரம்பித்தோம். எல்லா ஊர்களில் இருந்தும் கார்ப்பெட்டுகளை வரவழைத்து இங்கு விற்பனை செய்கிறோம். குறிப்பாக காஷ்மீர் மற்றும் பெர்ஷியன் கார்ப்பெட்கள் தான் மக்கள் மத்தியில் இங்கு பிரபலமாக உள்ளது. அவர்கள் அதைதான் அதிகம் விரும்புகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஆப்கானிஸ்தான் கார்பெட்கள் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெயிலில் கைதிகள் தயாரித்த கார்ப்பெட்களும் எங்களிடம் உள்ளது. இந்தியாவை மொகலாயர்கள் ஆண்ட போது, கைதிகளை நெசவு வேலையில் ஈடுபடுத்தும் பழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பேரரசர் அக்பர், இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் என்று சொல்லலாம்.அதன் பிறகு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த போதும் இந்த பழக்கம் தொடர்ந்து வந்தது. சுதந்திரம் பெற்ற பிறகு தான் சிறையில் கார்ப்பெட் நெய்யும் பழக்கம் குறைந்து இப்போது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு செல்லும் போது பல பொருட்களை அவர்களுடன் எடுத்து சென்றனர். அதில் ஜெயில் கைதிகள் நெய்த இந்த கலையம்சம் பொருந்திய அற்புதமான கார்ப்பெட்டுகளும்அடங்கும். அதில் மிச்சமிருந்த சிலவற்றை என் தாத்தா அவர் காலத்தில் சேகரித்து வைத்து இருந்தார். அவரிடம் இருந்து என் அப்பா இப்போது, நானும் என் சகோதரியும் அதனை பராமரித்து வருகிறோம்.’’

“கார்ப்பெட்டுகளில் என்னென்ன வகை இருக்கிறது?”

‘‘நகரம் மற்றும் பழங்குடியினர் என இரண்டு வகையினரால் கார்ப்பெட்கள் தயாரிக்கப்படுகிறது. நகரத்தில் இருப்பவர்கள் தயாரிப்பதற்கு பிரத்யேக டிசைனர்கள் இருப்பாங்க. அவங்க என்ன டிசைன் மற்றும் நிறங்கள் வரவேண்டும் என்று சொல்வார்கள். இது பார்க்க கொஞ்சம் மார்டனாக இருக்கும். இதுவே பழங்குடியினர் தயாரிக்கும் கார்ப்பெட்டில் அவர்களின் பாரம்பரிய கலாச்சாரம் பிரதிபலிப்பதை நாம் பார்க்க முடியும். ஒவ்வொரு பழங்குடியினர் தயாரிக்கும் கார்ப்பெட்களின் டிசைன்கள் வித்தியாசமாகவும் தனித்தும் இருக்கும். ஈரானில் காஷ்காய், மத்திய ஆசியாவில் காகேசியன் மற்றும் சீனாவில் சமர்கந்த் போன்ற பழங்குடியினர் கார்ப்பெட்களை தயாரித்து வருகிறார்கள். இதில் பை மற்றும் பிளாட் கார்ப்பெட்டுகள் உள்ளன. பை கார்ப்பெட்களில் நாம் சின்ன சின்ன நூல்களை உணரமுடியும். பிளாட் கார்ப்பெட்கள் என்பது நம்மூர் ஜமுக்காளம். இதை கிலிம் என்றும் சொல்வார்கள். ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கியில் கிலிம் போன்ற கார்ப்பெட்கள் தயாரித்து வருகிறார்கள். கார்ப்பெட்டுகளை நாம் தரையிலும் விரிக்கலாம் அல்லது சுவற்றிலும் தொங்க விடலாம். எங்களிடம் எல்லா வகையான கார்ப்பெட்டுகளும் உள்ளன.’’

“உங்கள் கார்ப்பெட்டுகளுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?”

‘‘பொதுவாக கைகளால் நெய்யப்படும் கார்ப்பெட்களுக்கு தான் மவுசு அதிகம். காரணம் அவை ஒரே டிசைன் மறுபடி திரும்ப செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. மெஷின் அப்படி இல்லை. ஒரே டிசைனை கம்ப்யூட்டரில் ஏற்றினால் போதும் எவ்வளவு வேண்டும் என்றாலும் நாம் அதை உருவாக்கலாம். இவை அதிக காலம் நிலைத்து இருக்காது.முப்பது வருடம் முன்பு வரையெல்லாம் உயர்தட்டில் வசிக்கும் மக்கள் மட்டுமே தான் இதனை பயன்படுத்தி வந்தனர். இப்போது எல்லாரும் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்தக் கலையை பற்றி இப்போது பலருக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. மேலும் எல்லாரும் தங்களின் வீட்டினைஅலங்கரிக்க விரும்புகிறார்கள்.இப்ப 3000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த கார்ப்பெட்டுகள், இன்னும் 15 ஆண்டுகளில் 3 லட்சமாக கூட விலை நிர்ணயித்து விற்கப்படலாம். காரணம் இவை குறைந்தபட்சம் 100 ஆண்டுகளுக்கு மேல் நாம் பயன்படுத்துவது பொருத்து இவற்றின் தரம் குறையாமல் அப்படியே இருக்கும்.”

- ஷம்ரிதி

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: