வினோதமும், விபரீதமும்! சில வித்தியாச சடங்குகள்

உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் என்றார் ஒரு கவிஞர். உண்மையில், இந்த உலகம் பல வித்தியாசமான சமூகங்களின் நிலமாகவும் இருக்கிறது. உலகெங்கும் நவீன நாகரிகம் பரவிவிட்ட இந்தக் காலத்திலும் இன்னமும் பழைய தொல்குடிச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அப்படியே பின்பற்றும் பல இனக் குழுக்கள் ரத்தமும் சதையுமாய் வாழ்ந்துகொண்டுள்ளன. கேட்பதற்கே கொடூரமாகவும் பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் இருக்கும் அந்த விநோத மனிதர்களையும் அவர்களின் சடங்குகளையும் பற்றிய ஒரு ரவுண்டப் இது.

விரலை வெட்டிக்கொள்ளும் டானிகள்

ஒரு வீட்டில் யாரேனும் இறந்தால் அதன் துக்கம் அளவிட முடியாததுதான். வருடங்கள் கடந்தாலும் இறந்தோர் நினைவு இம்சிக்கவே செய்யும். அதற்காக அதையே நினைத்து அமர முடியுமா? ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் திரும்புவதுண்டோ என்று ஒரு தமிழ் பாட்டு உண்டு. மேலும் தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு அல்லவா? இப்படியான பழமொழிகள் மனிதர்களின் உறவையும் அதே சமயம் ஒவ்வொருவரும் இங்கு தனித்தனிதான் என்ற உண்மையையும் நமக்கு உரக்கச் சொல்கிறது. ஆனால், இந்தோனேஷியாவின் டானிகளுக்கு இப்படியான சமாதானங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஒரு வீட்டில் துக்கம் நிகழ்ந்தால் அதற்கான ஈடு ஒன்றை அந்த வீட்டுப் பெண்கள் கொடுத்தே தீர வேண்டும். அதாவது, அந்த துக்கத்தின் அடையாளமாக அவர்கள் தங்கள் விரலை வெட்டிக்கொள்கிறார்கள்.

முன் விரலை வெட்டி பலி தருவதன் மூலம் தங்கள் துக்கத்தை இறந்த ஆன்மாவுக்குத் தெரிவிக்கிறார்கள். மேலும், ஆவிகள், பேய்கள் போன்ற தீய சக்திகள் மேற்கொண்டு தங்கள் குடும்பத்தை துன்புறுத்தாமல் இருக்கவும் இந்தக் கொடூரச் சடங்கை செய்கிறார்கள். பெரும்பாலும் இந்த சடங்குகள் இன்று பெண்களின் விருப்பமின்றி வம்படியாகவே செய்யப்படுகிறது. விரலை வெட்டும் முன் அதை ஒரு மெல்லிய நரம்பினால் இறுகச் சுற்றி விரலை மரத்துப் போகச் செய்கிறார்கள். பின்னர் ஒரு கூர்மையான கத்தி கொண்டு படீரென வெட்டுகிறார்கள். அதோடு முடியவில்லை கொடுமை. வெட்டுப்பட்ட கையில் அந்த திசு ஆற வேண்டும் என்பதற்கு வெட்டுப்பட்ட நுனியை தீயில் கருக்கும் அவலமும் அடுத்து அரங்கேறும். பெண்கள் வலியால் கதறக் கதற இந்தச் சடங்கை இன்றும் செய்துகொண்டிருக்கிறார்கள் டானிகள்.

சொந்த மனிதர்களையே புசிக்கும் யானோமாமா

வெனிசுலாவுக்கும் பிரேசிலுக்கும் இடையில் உள்ள அமேசான் காடுகளில் வசிக்கிறார்கள் யானோமாமா பழங்குடிகள். இன்று சிவிலியன்களுடன் பழகி குடி, கூத்து என்று நாசமானாலும் இவர்களில் பலர் இன்றும் காட்டின் மடியில் யாரிடமும் ஒட்டாமல்தான் வாழ்கிறார்கள். யானோமாமிகளைப் புரிந்துகொள்ளவே முடியாது. திடீரென எதிர்பாராத தருணத்தில் நம்மைத் தாக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதால் இவர்களிடம் ஒதுங்கியிருப்பதே நல்லது என்பார்கள். இரு நூற்று ஐம்பது கிராமங்களில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பேர் வசிக்கக்கூடும் என்கிறார்கள். யானோமாமா பழங்குடிகள் வாயில் இடது வலது ஓரத்திலும் தாடைக்கு கீழ் உதட்டின் அடியிலும் சிறுகுச்சிகளைப் பொருத்திக்கொள்கிறார்கள்.

பதினேழாம் நூற்றாண்டிலேயே சிவிலியர்களால் அடையாளம் காணப்பட்டாலும் தங்கள் வித்தியாசமான சடங்குகளாலும், விநோதமான பழக்க வழக்கங்களாலும்  தனித்துவமானவர்களாகவும் நெருங்க அஞ்சப்பட வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள் யானோமாமாக்கள். இவர்களின் விநோதமான, பயங்கர சடங்குகளில் ஒன்று சொந்த இன மனிதர்களையே புசிப்பது. பொதுவாக கானிபலிசம் என்பதைப் பின்பற்றும் இனக்குழுக்கள் தங்கள் எல்லைக்குள் நுழையும் அந்நியர்கள், எதிரிகளைத் தங்கள் குலசாமிக்கு படையலிட்டு அதைத்தான் பிரசாதம் போல் புசிப்பார்கள். (நாம் கடாச்சோறு சாப்பிடுவோமே அதுபோல) ஆனால், இந்த யானோமாமாக்கள் தங்கள் சொந்த இனத்து மனிதர்களையே புசிக்கிறார்கள். ஒரே ஆறுதல் அவர்களை உயிரோடு சாப்பிடுவது இல்லை. இறந்தால்தான் சாப்பிடுவார்கள்.

ஒருவர் இறந்த பிறகு அவரை சில குறிப்பிட்ட இலைதழைகள் கொண்டு அவற்றால் நாற்பத்தைந்து நாட்களுக்கு மேல் சுருட்டி வைப்பார்கள். அவற்றில் நுண்ணியிர்கள் தோன்றி அதன் உடல் பாகங்களை எல்லாம் உண்டபிறகு. எஞ்சிய பகுதியைச் சேகரித்து அதனை வாழைப்பழ சூப்பில் கலந்து அனைவரும் குடிப்பார்கள். மீண்டும் ஒரு வருடங்கள் கழித்து எஞ்சிய சாம்பலை வாழைத்தண்டு சூப்பில் கலந்து குடிப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் இறந்தவர் தனது வலிமையை இனக்குழுவுக்கு தருகிறார். மேலும், அவரின் ஆன்மா தடங்களின்றி சொர்க்கத்துக்குச் செல்ல அவர்கள் இதைப் பருக வேண்டியது அவசியம்.

புதைத்தவர்களைத் தோண்டி எடுத்து அலங்கரிங்கும் டொராஜன்கள்

இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின் தீவு ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கும் பழங்குடியினர் டொராஜன் மக்கள். சுமார் பதினொரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இவர்களில் பெரும்பகுதியினர் டானா டொராஜா (டொராஜன்களின் பூர்வ நிலம்) என்ற பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார்கள். இங்குதான் இறந்தோரின் சடலங்களைத் தோண்டி எடுத்து அவற்றுக்குப் புத்தாடை அணிவித்து மீண்டும் புதைக்கும் மா‘நிநி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

டொராஜன்களில் இப்போது பெரும்பகுதியினர் கிறிஸ்துவர்கள். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு சென்ற டச்சுக்காரர்கள் இந்த நிலத்தை தங்களின் காலனியாக்கி, இம்மக்களை தங்களின் அடிமைகளாக்கியதோடு இவர்களுக்கு டொராஜன் (மேல் நிலத்து மக்கள்) என்ற பெயரையும் வழங்கினார்கள். கிறிஸ்துவத்தைப் போலவே இஸ்லாமும் இங்கு உண்டு. கிறிஸ்துவம் நுழையும் முன்போ அதே காலகட்டத்திலோ இஸ்லாம் இங்கு நுழைந்திருக்க வேண்டும். ஆனால், இப்போதும் இந்தப் பழங்குடிகளில் சிலர் இந்த பெரு மதங்களில் கரைந்துபோகாமல் தங்கள் பூர்விகமான அலூக் மதத்தில் உள்ளார்கள். இந்தோனேஷிய அரசு மூதாதையர்களின் வழி எனப்படும் அலூக் டூ டோலோ மதத்தை சட்டரீதியாக அங்கீகரித்துள்ளது.

டொராஜன்களில் அலூக் மதத்தைப் பின்பற்றும் மக்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. இயற்கையோடு இணைந்து வாழும் அற்புதமான மக்களாக இவர்கள் உள்ளார்கள். தங்கள் பிரச்னைகள், தேவைகள் அனைத்தையும் இயற்கையிடமே ஒப்படைக்கிறார்கள். இயற்கையோடு இயற்கையாகக் கலந்த முன்னோர்களின் ஆசி நம்மை வழி நடத்தும் என்று நம்புகிறார்கள்.நீத்தார் சடங்குகள் அலூக் மதத்தில் மிக விரிவாக நடைபெறுகிறது. இறப்பவரின் சமூக அந்தஸ்து, தகுதிக்கு ஏற்ப நாட்கணக்கில் தொடங்கி மாதக் கணக்கில் ஏன் வருடக் கணக்கில்கூட நீத்தார் சடங்குகளைச் செய்கிறார்கள். டொராஜன்களைப் பொருத்தவரை மரணம் என்பது திடீரென ஏற்படுவது அல்ல. அது பன்னெடுங் காலமாக சிறிது சிறிதாக நிகழும் பெரும் பயணத்தின் ஒரு முக்கிய பகுதி.

புயா எனப்படும் ஆன்மாக்களின் நிலம் நோக்கி ஒவ்வொரு உயிரும் பயணிக்கும் புனித யாத்திரையின் தொடக்கமே மரணம். ஒவ்வொரு உயிரும் அந்த புயாவை அடைந்து, பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினால்தான் அந்தக் குடும்பம் செழிப்போடு நன்றாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மரணத்தையும் ஒரு திருவிழா போல கொண்டாடுகிறார்கள்.

நீத்தார் சடங்குகள் செய்தே தங்கள் மொத்த செல்வத்தையும் இழப்பவர்கள்கூட இச்சமூகத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை. அதைச் செய்ய வேண்டியது தங்கள் வாழ்நாள் கடமை என நினைக்கிறார்கள். பிற்பாடு புயா எனப்படும் தங்கள் ஆன்மாவின் நற்பயணத்துக்காக குடும்பத்தவர் நமக்கு சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்றால் நாம் இப்போது இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற மனோபாவமும் இதற்குப் பின் இருக்கிறது. சிலர் தங்களுடைய நீத்தார் சடங்குக்காக தாங்களே காசு சேர்த்து வைத்துவிட்டுச் செல்வதும் உண்டு. எப்படி இருந்தாலும் டொராஜன்களில் மரணச் சடங்கு என்பது பிரமாண்டமானது.

நீத்தார் சடங்கு நடக்கும் இடத்தை ரண்டி என்பார்கள். அங்குதான் நிகழ்வுக்கான பார்வையாளர்கள், இறந்தோர் குடும்பத்தார், உறவுகள், நட்புகள் என அனைவரும் கூடுவார்கள். ஒரு பக்கம் குடும்பத்தவர்களும் நெருங்கியவர்கள் அழுதுகொண்டிருப்பார்கள். பெண்கள் மாரில் அடித்துக்கொண்டு அழுவார்கள். மறுபுறம் நீத்தார் சடங்கின் போது ஓதப்படும் புனித மந்திரங்கள் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும். இன்னொருபுறம் புல்லாங்குழல் இசையும் வாத்தியக் கருவிகளும் அவ்விடத்தின் துக்கத்தை கணக்கச் செய்யும்.  இறந்தவர்களின் உடலை பல்வேறு வகையான துணிகள் கொண்டு பலமுறை சுற்றுவார்கள்.

விரிவான நீத்தார் சடங்குகள் முடிந்த பிறகே அதை நல்லடக்கம் செய்வார்கள். அதுவரை அவ்வுடல் டாங்கோனான் எனப்படும் கட்டடத்தில் வைக்கப்படும். மிகப்பெரிய படகைப் போன்ற அமைப்புகொண்ட விசித்திரமான கட்டடம் இது. இங்குதான் இறந்தவர் சடங்குகளும் செய்யப்படும். உடலை நல்லடக்கம் செய்யும்வரை அந்த ஆன்மா கிராமத்தையே சுற்றிக்கொண்டிருக்கும் என்பது நம்பிக்கை. நல்லடக்கம் செய்தால்தான் அவ்வுயிர் புயா எனும் ஆன்மாக்களின் நிலம் நோக்கிச் செல்லும்.

நல்லடக்கம் செய்யும் முன் பலவிதமான சடங்குகளைச் செய்ய வேண்டும். பலிகள் இங்கு மிகவும் முக்கியம். எருமைமாடுகள், பன்றிகள், கோழிகள் என விதவிதமான உயிர்பலிகள் தர வேண்டும். இறந்தோரின் ஆவி எருமைகள் மீதேறியே புயாவை அடையும் என்பதால் எவ்வளவு அதிகமான எருமைகள் படைக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக அவர்கள் பயணம் நிறைவடையும் என்பது நம்பிக்கை. பத்து எருமைகள் நூற்றுக்கணக்கான பன்றிகள் அதைவிட அதிகமான கோழிகள் கொடுப்பது என்பது உயர்வானவர்களுக்கான சடங்கு. எருமைகளின் தலையையும் பன்றிகளின் தலையையும் சீவி வரிசையாக வைத்து வணங்குவார்கள். இந்தப் படையலின் போது உச்சபட்ச இசை முழங்கும். இளையோர் வெறிகொண்டு ஆடுவார்கள். சன்னதம் வந்தது போல் மக்கள் துடியான மனநிலையில் இருப்பார்கள். மூத்தோர்களின் ஆவி அதைப் பார்க்க ஆங்காரத்துடன் காத்திருக்குமாம். சேவல் சண்டையும் இந்த சடங்கில் மிகவும் முக்கியம். சேவல் சண்டைகளின் போது ஏற்படும் அடிதடிகளில் மரணம்கூட ஏற்படுமாம். இத்தனை களேபரமாக ஒரு நீத்தார் சடங்கைச் செய்கிறார்கள் இம்மக்கள்.

எவ்வளவு வறியவர்கள் என்றாலும் குறைந்தபட்சம் மூன்று கோழிகளை அறுத்தாவது சடங்கு செய்ய வேண்டும். இல்லாவிடில் அந்த ஆன்மா புயாவை அடையாது. பொதுவாக, இருப்பத்தைந்து ஜோடி கோழிகளை பலியிட்டு இச்சடங்கை நிறைவு செய்கிறார்கள்.இந்த சடங்குகளை இறந்த குடும்பத்தாரின் பொருளாதார நிலைக்கு ஏற்ப வெவ்வேறு காலகட்டத்தில் செய்யலாம் என்பதால் சில வசதியில்லாத குடும்பத்தவர்கள் வருடக் கணக்கில்கூட செய்கிறார்கள். அதுவரை இறந்தோர் உடல் துணிகள் சுற்றப்பட்டு டாங்கோனானில் வைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக, மூன்று முறைகளில் இங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. சவப்பெட்டியை ஏதேனும் குகைகளிலோ தோண்டப்பட்ட பாறைக் குடைவுகளிலோ வைக்கிறார்கள். சிலர்  மலை உச்சிகளில் மரங்களில் சவப்பெட்டியை கட்டிவிடுகிறார்கள். இறந்தவர்கள் ஏதேனும் காரணத்துக்காக அவ்வுடலைத் தேடி மறுபடியும் வருவார்கள் என்ற காரணம் இருந்தால் அவ்வுடலை தொங்கிய நிலையிலேயே கட்டுகிறார்கள்.  குழந்தைகளை இப்படித்தான் அடக்கம் செய்கிறார்கள். வசதியானவர்கள் உயரமான மலை உச்சிகளின் பக்கவாட்டில் புதைக்கிறார்கள். இதைத் தயாரிக்க மாதக்கணக்கில் நாட்களாகும். சில இடங்களில் ஒரு மொத்த குடும்பத்தையும் புதைக்கும் அளவுக்கான இடம்கூட தோண்டப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மா’நிநி எனும் திருவிழாதான் இச்சடங்குகளின் உச்சம். இந்த சடங்கை ஒவ்வொரு சடலத்துக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டுமாம். இந்தச் சடங்கின் போது இறந்தவரின் உறவினர்கள் இடுகாட்டில் கூடுகிறார்கள். புதைக்கப்பட்ட தங்களின் உறவினர் உடலைத் தோண்டி எடுத்து அதனை சுத்தம் செய்கிறார்கள். பிறகு, தாங்கள் கொண்டு வந்திருக்கும் புத்தாடைகளை அந்த சடலங்களுக்கு அணிவித்து வணங்குகிறார்கள். சிலர், அந்த சடலங்களை ஊருக்குள்ளும் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். புயாவை நோக்கிச் செல்வதற்கான பயணத்தில் தங்கள் முன்னோருக்கு உதவினால் அவர்களின் ஆன்மா தங்களை வழிநடத்தும். ஆபத்து காலங்களில் உடன் இருக்கும். நல்லவற்றை ஆசிர்வதிக்கும் என்பது இந்தச் சடங்குகளின் பின்னுள்ள நம்பிக்கையாய் இருக்கிறது.

கரடி படையல் செய்யும் அய்னுக்கள்

அய்னுகள் ஜப்பான் மற்றும் ரஷ்யப் பகுதிகளில் வசிக்கும் தனித்துவமான இன மக்கள். இவர்கள் தங்கள் கடவுளை மகிழ்ச்சிபடுத்த கரடியை பலியாகக் கொடுத்து வரங்களை வாங்கிக்கொள்கிறார்கள். கரடிகள் மனிதர்களிடையே உலவும் கடவுளர் உருவங்கள் என்று நம்பும் அய்னுக்கள் அவற்றை மேல் உலகத்துக் கடவுளிடம் படையலாகத் தரும்போது கடவுள் மகிழ்ந்து வேண்டிய வரங்களை தருவார் என்று நம்புகிறார்கள். பார்க்கும் நமக்குத்தான் இந்தப் படையல் பதபதப்பைத் தரும். அய்னுக்களோ மிகுந்த பக்தியோடு இதைச் செய்கிறார்கள். நாம் கோயில்களுக்கு ஆட்டை நேர்ந்துவிடுவதைப் போலவே இவர்கள் கரடிகளை நேர்ந்துவிடுகிறார்கள்.

இதற்காக காடுகளுக்குப் போய் அலைந்து திரிந்து குட்டியுடன் இருக்கும் ஒரு தாய்க் கரடியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு, ஒரு குழு தாய் கரடிக்குப் போக்குக் காட்டி அதனை வெகு தூரம் அழைத்துச் செல்ல, இன்னொரு குழு குட்டிக் கரடியை லவட்டிக்கொண்டு வருகிறது. அப்படிக் கொண்டுவரும் கரடியை இரண்டு வருடங்கள் வளர்க்கிறார்கள். கரடி கொழுகொழுவென இளமைப் பருவம் எய்தியவுடன் அதனைக் கழுத்தை நெரித்தோ, கத்தியால் குத்தியோ கொன்று கடவுளுக்குப் படைக்கிறார்கள். கரடியின் ரத்தத்தைக் குடிப்பது, அதன் சதையைப் பச்சையாகப் பிய்த்துத் திண்பது ஆகியவையும் சில இடங்களில் உண்டு. இன்று இச்சடங்கு அரிதாக நடந்தாலும் இதை முழுமையாகத் தடை செய்ய இயலவில்லை.  

மனைவியுடன் குண்டம் இறங்கும் சீனர்கள்

குண்டம் இறங்குதல் இந்தியாவுக்கு அதிலும் குறிப்பாக நம் தமிழகத்துக்குப் புதிதல்ல. தமிழகம் முழுதும் ஒவ்வொரு வருடமும் மாரியம்மன் கோயிலில் கோடிக் கணக்கான பக்தர்கள் இந்தப் பூமிதித் திருவிழாவில் கலந்துகொள்கிறார்கள்தான். ஆனால், சீனாவில் இந்த திருவிழா சற்றே வித்தியாசம். இங்கு சில இடங்களில் கணவன் மனைவியை உப்பு மூட்டை போல் பின்புறம் தூக்கிவைத்துக்கொண்டு குண்டத்தில் இறங்க வேண்டும். இந்த சடங்கில் பெரும்பாலும் புது மணத் தம்பதிகள்தான் ஈடுபடுகிறார்கள். ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கவும், சுகப் பிரசவம் நிகழவும், நோய் நொடிகள் அண்டாமல் இருக்கவும், கணவன் மனைவி ஒற்றுமையோடு வாழவும் இப்படியான நேர்ச்சையில் சீனர்கள் ஈடுபடுகிறார்கள்.  

- என்.யுவதி

Related Stories: