அமித்ஷாவின் பழைய பகைதான் ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ அதிகாரிகள் படையெடுக்க காரணமா?

டெல்லி: 17 மணிநேரத்தில் நான்கு முறை டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ அதிகாரிகள் படையெடுத்துவிட்டார்கள். சி.பி.ஐ பிடியிலிருந்து ப.சிதம்பரம் தப்பியது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது என பா.ஜ.க வட்டாரத்தில் கூறப்படுகிறது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோபத்தைக் காட்டுவதன் பின்னணியில் பத்தாண்டுகாலப் பகை இருப்பதாகச் பா.ஜ.க வட்டாரத்தில் கூறப்படுகின்றனர். ப.சிதம்பரத்தின் மீது மத்திய அரசு வன்மத்துடன் செயல்படுகிறது எனவும், இதன் பின்னால் உள்ள வரலாறுதான், எங்களைக் கவலையடையச் செய்கிறது என சிதம்பரத்துக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 2010-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் இருந்தார். அந்தச் சமயத்தில் குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் அமித்ஷாவைக் குற்றவாளி என சி.பி.ஐ கூறியது. அமித்ஷாவைக் கைது செய்யும் நிலை வந்தபோது அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் சில நாள்கள் தலைமறைவாக இருந்த அவர், 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதற்குப் பின்னால் ப.சிதம்பரத்தின் அழுத்தமிருந்ததாக அப்போது அமித்ஷா தரப்பினர் கருதினர்.

தற்போது மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா இருக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ. நிர்வாகம் உள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால், உடனடியாக அவரைக் கைதுசெய்ய வேண்டும். மேல்முறையீடு செல்லும்வரை காத்திருக்க வேண்டாம் என்று நேற்று காலையே சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டிருந்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும் அங்கிருந்து வெளியேறிய சிதம்பரம், நேராக அவருடைய டெல்லி இல்லத்துக்குச் சென்றார். அதற்குள் அவரை விசாரணைக்கு அழைக்கும் சம்மனைத் தயார் செய்யும் வேலையில் சி.பி.ஐ அதிகாரிகள் இறங்கினர். முறைப்படி சம்மனை அவருக்குக் கொடுத்து சி.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்துக் கைது செய்யும் முடிவில் அதிகாரிகள் இருந்துள்ளனர்.

ஆனால், வீட்டுக்கு வந்த ப.சிதம்பரம் உடனடியாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபில் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படியே, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துவிட்டு வீட்டிலிருந்து சிதம்பரம் வெளியேறிவிட்டார். அவருடைய போனும் அதோடு ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்தில் நீண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. சிதம்பரம் கைது செய்யப்பட்டால் அது கட்சிக்கு மிகப்பெரிய கெட்டபெயரை ஏற்படுத்திவிடும் என்று சோனியா கருதியுள்ளார். ஜன்பத் சாலையில் உள்ள சோனியாவின் வீட்டிலிருந்தே, சிதம்பரம் விஷயத்தில் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெறவேண்டும் என்று வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளனர். மறுபுறம் அமித்ஷா தரப்பு எப்படியும் இரவுக்குள் அவரைக் கைது செய்யவேண்டும் என்று சி.பி.ஐ-க்கு அழுத்தம் கொடுக்க, நள்ளிரவு நேரத்தில் சிதம்பரம் வீட்டில் அழைப்பாணை நோட்டீஸை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதுவரை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று சிதம்பரம் தரப்பிலிருந்து சி.பி.ஐ-க்குப் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஒருவரது வீட்டில் சிதம்பரம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் தனது வழக்கு குறித்த தீர்ப்புக்குப் பிறகே இந்த விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று அவர் முடிவெடுக்க உள்ளார். அதே நெருக்கடிகள் தொடர்ந்தால், சி.பி.ஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகிவிட்டு, சிறைக்குச் செல்லும் மனநிலைக்கு சிதம்பரம் வந்துவிட்டார் என்கிறார்கள். அவருக்கு நெருக்கமானவர்கள். சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னையிலிருந்தே நிலைமைகளைக் கேட்டு வருகிறார்கள்.

அமித்ஷாவின் பழைய பகைதான், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ இவ்வளவு வேகம்காட்ட காரணம் என பா.ஜ.க வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், சிதம்பரத்தைக் காப்பாற்ற அபிஷேக் சிங்வி, கபில்சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட பத்துப் பேர் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் படையே இன்று உச்ச நீதிமன்றத்தில் களமிறங்கியுள்ளது. ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்ததும் ஒட்டுமொத்த வழக்கறிஞர் குழுவும் அடுத்தகட்ட ஆலோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

Related Stories: