வெட்கப்பட வேணாம்... இது Lifeskill Education!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழும் போதெல்லாம் நம் சமூகத்தில் பாலியல் கல்வி அவசியம் என்ற குரல் முணுமுணுப்பாகவேனும் அவ்வப்போது சொல்லப்படுகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் போது இக்குரல் சற்று வலுவாகவே மேலெழுகிறது. ஆனால், இதைச் சொல்பவர்களுக்கேகூட பாலியல் கல்வி என்றால் என்ன என்பது குறித்து எந்த அளவுக்குப் புரிதல் இருக்கிறது என்பது முக்கியமான கேள்வி. பாலியல் கல்வி குறித்து நம் சமூகத்தில் பலவிதமான தவறான புரிதல்கள், குழப்பங்கள், மனத்தடைகள், கூச்சங்கள் உள்ளன. ‘குழந்தைகளிடம் போய் செக்ஸைப் பற்றி எல்லாமா பேசுவது. அதெல்லாம் அந்தந்த வயதில் அவர்களே தெரிஞ்சுக்குவாங்க…’ ‘சொல்லிக் கொடுத்தா இத்தனை தலைமுறையா நாமெல்லாம் வளர்ந்தோம். தானா தெரியவேண்டியதை அவசரப்பட்டு உடைச்சுப் பேசி பிரச்னையை பெரிதாக்கக்

கூடாது’ ’எதையும் சொல்லித் தராமலே பிஞ்சுல பழுக்குதுங்க… சொல்லியும் கொடுத்தா பிறகு கேட்கவே வேணாம்’ என்பதைப் போன்ற தவறான கருத்துகளை படித்தவர்களேகூட கொண்டிருக்கிறார்கள்.

நிஜத்தில் பாலியல் கல்வி என்பது வெறும் பாலுறவு பற்றிய கல்வி மட்டுமே அல்ல என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டியது இருக்கிறது. பிறகு, எல்லா வயதுக் குழந்தைகளுக்குமே பாலுறவுக் கல்வி ஏற்றதும் அல்ல. பாலியல் கல்வி என்பது ஒரு பெரிய பாடத்திட்டம் என்று வைத்துக்கொண்டால் பாலியல் கல்வி என்பது அதில் ஒரு சிறுபகுதி. அது வளரிளம் பருவத்தினருக்கானதே தவிரவும் சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகளுக்கான பாலியல் கல்வி என்பது ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள் உட்பட அனைவருக்குமான பாலியல் சமத்துவம் பற்றி பேசுவதன் வழியே, பாலின ரீதியிலான வன்முறையை சமூகத்திலிருந்து அகற்ற முற்படுவது. அதுதான் பிரதானமானது. ஒரு சமூகம் எந்தளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்துதான் அதற்கான பாடத்திட்டம் தீர்மானிக்கப்பட வேண்டும். நாம் இன்னமுமேகூட பழங்குடிச் சமூக மனநிலையிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை என்று சொன்னால் சிலருக்குக் கோபம் வரக்கூடும். யோசித்துப்பாருங்கள் இங்கே எத்தனை பேர் தங்களை சுயசிந்தனை உடைய தனிமனிதர்களாக கருதிக்கொள்கிறோம்.

எத்தனை பேரை ஒரு தனிமனிதராக அவருக்கான வாழ்வை வாழ நாம் அனுமதிக்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனையும் குடும்பத்தோடு இணைத்து, குடும்பத்தை சாதியோடு இணைத்து, சாதியை மதத்தோடு இணைத்து ஒரு மனிதனை சுயாதீனமாக முடிவுகளை எடுக்க இயலாதவனாக மாற்றிவைத்திருக்கிறோம். பல சமயங்களில் இங்கு எல்லோரும் நம் சமூகம் தரும் சூழல் அழுத்தங்களை மீற முடியாமல்தான் என்ன சாப்பிடுவது என்ற சிறுசிறு விஷயங்களில் தொடங்கி திருமணம் உள்ளிட்ட பெரிய விஷயங்கள் வரை தங்களுக்கு முழுமனதோடு விருப்பம் இல்லாத ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோம். இப்படியான ஒரு சமூகத்தை எப்படி நாம் முதிர்ச்சியான சிவில் சமூகம் என்று சொல்ல முடியும்?அடிப்படையிலேயே பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் நிறைந்திருக்கும் இந்த சமூகத்தில் பாலியல் கல்வி என்பது முதலில் இந்தப் பாகுபாட்டை களைவதாகத்தான் இருக்க முடியும். இதற்கு முதலில் கற்க வேண்டியவர்கள் பெற்றோரே தவிரவும் குழந்தைகள் அல்ல. இங்கு பெற்றோருக்கே பெண் குழந்தைகளை எப்படி கெளரவமாக, அவர்களின் சுயமரியாதை இழிவுபடுத்தாமல் நடத்த வேண்டும் என்பதைப் பற்றிய புரிதல் இல்லை. இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி குழந்தைகளுக்குப் பாலியல் சமத்துவத்தையும் பாலியல் கல்வியையும் சொல்லித்தர முடியும். எனவே, பாலியல் கல்வியின் அடிப்படைகளை முதலில் பெற்றோர்தான் கற்க வேண்டும்.

ஆண் பெண் குழந்தைகளை சமமாக நடத்துவதில் இருக்கிறது அடிப்படையான பாலியல் கல்வி. இங்கு எப்போதுமே ஆண் குழந்தைகள்தான் ஸ்பெஷல். ஏனென்றால் அவன்தானே ரத்த வாரிசு. என்ன இருந்தாலும் பெண் அடுத்த வீட்டுக்குப் போக வேண்டியவள்தானே. இந்த மனநிலைதான் இன்றும் பெரும்பாலான பெற்றவர்களுக்கு இருக்கிறது. முதலில் இது மாற வேண்டும். பெண் குழந்தைகளுக்கும் கல்வி முக்கியம் என்ற புரிதலுக்கு நம் சமூகம் வந்துவிட்டது மிக நல்ல விஷயம். ஆனால், இப்போதும் பெண் குழந்தை என்றால் அப்படி உட்காராதே, காலாட்டாதே, கால் மேல் கால் போடாதே, சத்தம்போட்டு சிரிக்காதே, இப்படி உடையணியாதே, மொட்டை மாடியில் நிற்காதே, அதிக நேரம் செல்போனில் பேசாதே, பையன்களுடன் பழகாதே, வெளியில் சுற்றாதே என்று சதா அவர்களைக் கண்காணித்துக்கொண்டிருப்பதும் ஒடுக்குவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்கள் மீதான அக்கறையில்தான் இதெல்லாம் சொல்லப்படுகிறது என்றாலும் இவ்வளவு தணிக்கைகள் அவர்களைத் தனிமைப்படுத்தும், அவமானத்தில் குறுகச் செய்யும் என்பதையும் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். நம் சமூகத்தின் இயல்பு குழந்தைகளைவிடவும் பெரியவர்களுக்கே புரியும் என்றாலும் கொஞ்சம் அவர்களின் ஆசைகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்.

முதலில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து படிப்பதை ஊக்குவிக்க வேண்டும். சிறு வயதிலேயே இருபாலினமும் ஒருவரை  ஒருவர் புரிந்து கொள்வதற்கான சூழலை உருவாக்க  வேண்டும். ஆண்கள் பள்ளி,  பெண்கள் பள்ளி என்று பாலினரீதியிலான பிரிவினைதான் பல சிக்கல்களுக்கும் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே, உங்கள் குழந்தைகளை எப்போதும் இருபாலர் (கோ எஜுகேஷன்) பள்ளிகளிலேயே சேர்த்திடுங்கள். ஆண், பெண் மட்டும் அல்ல இங்கு பாலியல் சிறுபான்மையினர் எனப்படும் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்டோரும் உள்ளனர் என்பதை குழந்தைகளுக்குப் புரியவைத்திடுங்கள். இவை ஒவ்வொன்றுமே இயற்கையான, எதார்த்தமான விஷயங்கள்தான். இதில் எந்தப் பாலினமுமே கீழும் அல்ல மேலும் அல்ல. இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திடுங்கள். ஆண் குழந்தை என்றாலும் சரி; பெண் குழந்தை என்றாலும் சரி இந்த எண்ணம் தீவிரமாகப் பதிய வேண்டும் அதுவே எதிர்கால பாலியல் சமத்துவத்துக்கும் பாலியல் வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்கும் வழியாக இருக்கும்.

குழந்தைகளிடம் எப்போதும் எதிர்பாலினம் குறித்த குழப்பமும் அறிந்துகொள்வதில் ஆர்வமும் பெரியவர்களிடம் கேட்டு அறிவதில் தயக்கமும் பல்வேறு வழிகளில் தானாகத் தெரிந்துகொள்வதில் ஒருவிதக் குறுகுறுப்பும் இருக்கும். இதெல்லாம் இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகள். இதை எல்லாம் புரிதலுடன் எதிர்கொள்ளுங்கள். இதை ஏதோ பெரிய தவறு போல கண்டிக்க முற்படும்போது குழந்தைகள் மேலும் குழப்பமடைகிறார்கள். இதெல்லாம் புறக்கணிக்க வேண்டிய பாவ காரியங்கள் என்பதைப் போன்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அவர்களுக்குப் புரியும் மொழியில் மிக இயல்பாக இந்த பாலின வேறுபாடுகளைப் பற்றி உரையாடுங்கள். ஆண் மற்றும் பெண் உடலியல் பற்றி விஞ்ஞானப்பூர்வமாகப் பேசுங்கள். அதற்கு முதலில் அதைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தையின் வயதுக்கு ஏற்ப அவற்றை விளக்க நாம் முற்பட வேண்டும். குழந்தைகள் நாம் நினைப்பதைவிடவும் புத்திசாலிகள். எனவே, ஏதும் சமாளிப்பாகச் சொன்னால் அதையும் அவர்கள் கண்டுகொள்வார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பால் உணர்வு சார்ந்த புரிதலை அந்தந்த வயதுக்கு தகுந்தாற்போல் ஏற்படுத்த வேண்டும். எந்தப் புரிதலையும் ஏற்படுத்தாமல்  வெறுமனே ‘குட் டச் பேட் டச்’ சொல்லிக் கொடுப்பதின் மூலம் சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளையே சந்திக்க நேரிடும். மேலும், இது அக்குழந்தைக்கு  எதிர்பாலினத்தின்  மீதான வெறுப்பையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். கல்வியின் வழியே இருபாலினத்துக்கும் இணக்கமான மனப்பான்மையை ஏற்படுத்தும்போது பாலியல் குற்றங்கள் குறைய நிறைய வாய்ப்புள்ளது. கோ  எஜுகேஷனில் படித்து வரும் குழந்தைகளைவிட, ஒரு பால் பள்ளியில் படித்து விட்டு வரும் குழந்தைகளுக்கு எதிர்பாலினத்தை  அணுகுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. குழந்தையிலிருந்தே எதிர்பாலினத்தோடு பழகுவதை ஊக்குவிக்கும்போது இந்தச் சிக்கல்  ஏற்படாது. பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாகக் கையாள வேண்டும். பூடகமாக அதனை கையாளும்போது அது ஆபத்தாக முடிய  வாய்ப்பிருக்கிறது.

பெண் குழந்தைகள் பருவம் எய்துவதற்கான காலகட்டத்தை நெருங்கும் முன்பே அதைக் குறித்து தெளிவாக, பொறுமையாக விளக்கிவிடுங்கள். இது முழுக்க முழுக்க இயற்கையான ஒரு நிகழ்வு. இது குறித்து அச்சப்படவோ, கூச்சப்படவோ, அவமானப்படவோ ஒன்றுமே இல்லை என்பதைத் தெளிவாக விளக்கிவிடுங்கள். பள்ளிக்கூடத்திலோ வேறு எங்காவது இருக்கும்போது இது நிகழ்ந்தால் அந்த சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி, சானிட்டரி நாப்கின்களை எப்படி உபயோகிப்பது என்பது வரை இது குறித்து விரிவாகவே சொல்லிவைத்திருப்பது நல்லது. இதனால், அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும். ஆண் குழந்தைகளிடமுமேகூட பெண்களுக்கு நிகழும் இந்த உடலியல் மாற்றம் இயற்கையானது. மனித வாழ்வுக்கு இன்றியமையாதது என்று மிகவும் நேர்மறையாகவே இதைப் பற்றிச் சொல்லுங்கள். இதை கேலி செய்யவோ, சிறுமைபடுத்தவோ இதில் ஒன்றுமே இல்லை. அப்படிச் செய்வதுதான் மானுடப் பண்பற்ற செயல். அதற்குத்தான் அவமானப்பட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்.

பத்து வயது முதல் பத்தொன்பது வயது வரை உள்ள காலகட்டம் முக்கியமானது. இதில், அடலசண்ட் என்ற பருவத்துக்குள் நுழையும் பதிமூன்று வயதுக்கும் மேற்பட்ட பருவம் மிகவும் முக்கியமானது. இந்த வயதில் பால் சார்ந்த குழப்பங்கள் தனித்துவமானவை. சிறுவயதிலேயே பாலியல் சமத்துவம் சார்ந்த புரிதல் ஏற்படுத்தப்பட்ட குழந்தைகள்கூட பாலுறவு சார்ந்த ஆர்வங்களால் குழம்பியிருப்பார்கள். எதிர் பாலினத்தவரால் வேகமாக ஈர்க்கப்படுவார்கள். எதிர்பாலினத்தவரோடு பேசுவதில் கூச்சமும் வெட்கமும் ஆர்வமும் பயமும் இருக்கும். இப்பருவத்தில்தான் உடலியல் மற்றும் செய்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஆண் பால் - பெண் பால் குறித்த கேள்விகள் எழும். இப்பருவத்தில் பாலியல்  சார்ந்தவற்றை உடன் இருக்கிறவர்களைப் பார்த்துதான் பெரும்பாலும் கற்றுக்கொள்வார்கள். அது  நல்லதாகவும் போகலாம் அல்லது தவறாகவும் ஆகலாம். சரியான வழிகாட்டுதல் இல்லையென்றால் பெரும்பாலும் அது தவறான வழியில்தான் கொண்டு செல்லும். பாலியல் குறித்து  வெளிப்படையாகப் பேசுவது நமது பண்பாட்டுக்கு  எதிராகப் பார்க்கப்படுகிறது. இதனால் முறையான வழிகாட்டுதலுக்கான வாய்ப்பு   மறுக்கப்படுகிறது. இதனால், இப்பருவத்தில் தனது அடையாளம் மற்றும் உறவு நிலை பற்றிய குழப்பநிலை இருக்கும்.

மேலும், நமது இந்தத் தயக்கத்தால் இளையோர் பாலியலைத் தவறாக புரிந்துகொள்வார்கள் அல்லது  புரிந்துகொள்ளாமலேயே போவார்கள். இதன் விளைவாக பாலியலை பரீட்சித்துப் பார்க்க முயற்சிப்பார்கள். இதனால் வெகு விரைவிலேயே பாலுறவுக்குள் நுழைவதற்கான வாய்ப்பிருக்கிறது. விடலைப் பருவத்திலேயே கர்ப்பம்  தரித்தல், பாலியல் தொடர்பான நோய்களுக்கு ஆளாதல் எனப் பல விளைவுகளை சந்திக்க  நேரிடுகிறது. பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளுக்குப் பாலினம் மற்றும் பாலியல் கல்வி சார்ந்த புரிதலின்மைதான் காரணமாக அமைகிறது.

பாலியல் என்பதை சமூக செயல்பாடாகக் கருதவும், அவர்களது பால் உணர்வு சார்ந்த விஷயங்களை சொல்லித்தரவும் வேண்டும். பிறப்புறுப்பைப் பற்றிப் பேச வேண்டும். அதனை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது? மாதவிடாய் என்றால் என்ன? சுய இன்பம் புரிவது சரியானதா? தூக்கத்தில் விந்து வெளியேறுவதற்கான  காரணம் என்ன? என பதின் பருவத்தில் நிகழும்  மாற்றங்கள் குறித்தான சந்தேகங்களை தீர்த்து வைப்பதாகவே பாலியல் கல்வி இருக்க வேண்டும்.

காதல் என்றால் என்ன? காதலுக்கும் எதிர்பால் ஈர்ப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன? காமத்துக்கான உணர்வு எப்படிப்பட்டது? என்பன  குறித்தெல்லாம் பேசுவதாகவும் பாலியல் கல்வி இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான விஷயங்கள்  இவையெல்லாம். ’இதைக் கற்றுக்கொடுப்பதை sex education என்று சொல்வதை விட life skill education என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்’ என்கிறார் மருத்துவர் நாராயண ரெட்டி. இங்கு ஆசிரியர்களுக்கே இது குறித்த சரியான புரிதல் இல்லை. உயிரியல் பாடத்தில் வரும் இனப்பெருக்க உறுப்புகள் குறித்த பாடம் எடுக்கவே ஆசிரியர்கள் தயங்கித் தத்தளிப்பதை இங்கு சொல்ல வேண்டும்.  எனவே ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் முறையான  புரிதலை  ஏற்படுத்திய பின்னர்தான் மாணவர்களை நோக்கிச் செல்ல வேண்டும்.

2013ம் ஆண்டில் Committee on Rights of the Child மற்றும் உலக சுகாதார நிறுவனமும் 2014ம் ஆண்டில் Health for the World’s  Adolescents என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் பாலியல் கல்வியை எவ்வாறு புகட்ட வேண்டும் என   சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், www.worldsexualhealth.org என்கிற வலைத்தளத்திலும் பாலியல் கல்வி குறித்து விஞ்ஞானப்பூர்வமான  கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன. 2007ம் ஆண்டு Ministry of Women and Child Development செய்த ஆய்வில் 53 சதவிகித ஆண் குழந்தைகளும் 47 சதவிகித பெண்  குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. பாலியல் சீண்டலுக்கு  ஆளாகும் குழந்தை அதைப் பெற்றோரிடம் சொல்லக் கூடத் தயங்குகிறது. தனக்கு உதவி வேண்டும் என்பதைக்கூட கேட்க  முடியாத அளவுக்குதான் இன்றைக்கு குழந்தை வளர்ப்பு இருக்கிறது. இப்படியான சூழலில் பாலியல் கல்வியை நாம்  ஊக்குவிக்கத்தான் வேண்டும்.

பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை வடிவமைப்பது என்பது மிகவும் சிக்கலான காரியம். ஏனெனில் இங்கு பலவிதமான சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பின்னணியில் இருந்து வரும் குழந்தைகள் நிறைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமான பொதுத்தன்மை நிரம்பிய பாலியல் கல்வி என்பது அவசியம். பிறகு தேவை என்றால் அந்தந்த குழந்தைகளுக்குத் தேவையான சிறப்புப் பாலியல் கல்வித் திட்டங்களை வடிவமைக்கலாம்.

கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக விஞ்ஞானிகள், உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், தத்துவியலார்கள், சமூகவியல் அறிஞர்கள் எனப் பலதுறை நிபுணர்களும் இணைந்து செய்ய வேண்டிய மிகப் பெரிய பணி இது.  

-  என்.யுவதி

Related Stories: