×

சென்னை வேப்பேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து: 3 பேர் காயம்

சென்னை: சென்னை வேப்பேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உதவி பொறியாளர் உள்ளிட்ட 3 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வியாசர்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகம் எதிரே மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அமைந்திருக்கிறது. அங்கிருந்து வேப்பேரி, பெரியமேடு மற்றும்  பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  வேப்பேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பகிர்மான பெட்டியில் பராமரிப்பு பணி நடைபெற்றதாகவும், பின்னர் உதவி பொறியாளர் சுரேஷ், ஊழியர்கள் லாரன்ஸ், பரணி ஆகியோர் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர முயன்றதாகவும் கூறப்படுகிறது.

அப்போது மின் பகிர்மான பெட்டியில் திடீரென நெருப்பு பிடித்துள்ளது. இந்த சம்பவத்தில் உதவி பொறியாளர் சுரேஷ், ஊழியர் லாரன்ஸ் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஊழியர் பரணி லேசான காயம் அடைந்தார். இதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி நெருப்பை அணைத்தனர். தீ விபத்து குறித்து போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தை அடுத்து வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.


Tags : Vepery, Electricity Assistant Operator's Office, fire, 3 people injured
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...