உத்தரகாண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 3 பேர் பலி!

உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ள அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. உத்தரகாசி அருகே உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் கூடிய பேய் மழை பெய்தது. இந்த பெரிய மழைக்கு 15க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், சிலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணியும் முடக்கி விடப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இந்தோத்தித் எல்லை பாதுகாப்பு படையினரும் மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் ஏராளமான வீடுகளும் விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாசி மாவட்டம் மோரி பகுதியில் இருந்து இன்று காலை மோல்டி பகுதிக்கு தனியார் ஹெலிகாப்டரில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. நிவாரணப் பொருட்கள் வழங்கிய பின்பு திரும்பி வரும் வழியில் மோல்டியை நெருங்கியபோது அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் பைலட் லால், துணை பைலட் சைலேஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ராஜ்பால் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.

Related Stories: