×

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்கவே சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது; ராகுல்காந்தி கண்டனம்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என்றுராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது நற்பெயரை கெடுக்கவே சிபிஐ, அமலாக்கத்துறை பிரிவை மத்திய அரசு பயன்படுத்துவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ப.சிதம்பரம் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முதுகெலும்பில்லாத சில ஊடகங்களையும் மோடி அரசு பயன்படுத்துவதாக ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்தார்.

மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.

இதனிடையே முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்தனர். நேற்று 2 முறை, இன்று 2 முறை என மொத்தம் 4 முறை அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவர் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதன் தொடர்ச்சியாக ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.


Tags : Former Finance Minister, PC Chidambaram, CBI officials, INX Media, Abuse case, Bail, Rahul Gandhi, Central Government
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...