புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனவே, அரசின் நடவடிக்கைகளில் தலையிட சிறப்பு அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு உள்ளது என்று மத்திய அரசு 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரம் கிடையாது எனக்கூறி, ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகார உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு கண்டு கொள்ளுமாறு கிரண்பேடிக்கு அறிவுறுத்தியது. அதன்படி தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கிரண்பேடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோல் மத்திய அரசின் உள்துறையும் தனியாக மனுவை தாக்கல் செய்தது. அம்மனுவில், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக மத்திய உள்துறை புதுச்சேரி அரசுக்கு தகவல் அனுப்பியது. அந்தக் கடிதம் குறித்து புதுச்சேரி அரசே கேள்வி எழுப்பாத நிலையில் மூன்றாம் மனுதாரர் எப்படி அரசின் கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்பி வழக்கு தொடர முடியும்? இதை தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். மனுதாரர் வழக்கு தொடர உரிமை இல்லை.

நிர்வாகம் தொடர்பான விவகாரத்தை சட்டப்பேரவை அதிகாரத்துடன் தொடர்புபடுத்தி தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசின் மனு குறித்து, புதுவை எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் தர உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Related Stories: