கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது: 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: கோவையில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இந்த கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை பல விதங்களில் நடந்து வருகிறது. கடந்த 18ம் தேதி தேனி மாவட்டத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவரை பந்தய சாலை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது மாணவர்களிடம் கஞ்சா விற்பதற்காக தனியாக வாட்ஸ் ஆப்- ல் குழு உருவாக்கி செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரது வாட்ஸ் ஆப் எண்ணை போலீசார் ஆய்வு செய்த போது அதில் கோவையில் உள்ள பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மலைச்சாமியிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவும் 2 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதே போல் கடந்த 19ம் தேதி சுங்கம் பகுதியில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த புளியகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். வாட்ஸ் ஆஃப்பில் இணைந்து மாணவர்கள் கஞ்சா வாங்குவது ஒருபுறம்  இருக்க மாணவர்களே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள சம்பவமும் கோவையில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஜான் மற்றும் பாரீஸ் என்ற இரண்டு மாணவர்கள் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் சப்ளை செய்து வருவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் இவர்களை கண்காணித்த போது கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றது உறுதியானது. இதையடுத்து மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு 1300 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்களிடம் அதிகரித்து வரும் கஞ்சா பழக்கம் பல குற்ற செயல்களுக்கு காரணமாக உள்ளது என மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். கொடிக்கட்டி பறக்கும் கஞ்சா விற்பனைக்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தால் தான் மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.

Related Stories: