×

ப.சிதம்பரத்தை கைது செய்யும் முனைப்பில் சிபிஐ; தேடப்படும் நபராக அறிவித்த அமலாக்கத்துறை

புதுடெல்லி: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்தார்.

மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.

இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் தர மறுத்த அடுத்த 3 மணி நேரத்தில் சிபிஐ அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாரானது. 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு விரைந்தனர். இதனால், சிதம்பரம் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவியது. ஆனால் வீட்டில் அவர் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அடுத்த சில நிமிடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகளும் ப.சிதம்பரத்தை தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். இதனையடுத்து ப.சிதம்பரம் 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டுமென சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது. ஆனால் ப.சிதம்பரம் ஆஜராகாத நிலையில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் இன்று காலை 2-முறை வந்தனர். ஆனால் ப.சிதம்பரம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதன் காரணமாக ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.


Tags : Former Finance Minister, PC Chidambaram, CBI Officers, INX Media, Abuse Case, Prior Bail, Supreme Court, Chief Justice
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...