×

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் கேட்கீப்பர் நியமிக்க கோரி அகல ரயில் பாதை உபயோகிப்பாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி: திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் கேட்கீப்பர் நியமிக்க கோரி திருச்சி டிஆர்எம் அலுவலகம் முன் அகல ரயில்பாதை உபயோகிப்பாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில்பாதை உபயோகிப்பாளர் கூட்டமைப்பு சார்பில் திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் உள்ள அனைத்து கேட்களிலும் நிரந்தர கேட் கீப்பர் பணியாளர் நியமிக்க வேண்டும்.

இந்த மார்க்கத்தில் சென்னைக்கு இரவிலும், பகலிலும் இரு முனைகளில் இருந்தும் விரைவு ரயில் இயக்க வேண்டும். மயிலாடுதுறை - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி மார்க்கத்தில் முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். மேலும் இந்த மார்க்கத்தில் இருந்து வடமாநிலம் மற்றும் தென் மாநிலங்களுக்கு அதிகளவில் ரயில்கள் இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் இருந்து கூட்டமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ரயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருச்சி தொகுதி எம்பியும், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசுகையில், மத்திய அரசின் ரயில்வே அமைச்சரிடம் உங்களின் கோரிக்கையை எடுத்துக்கூறி, அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கேட் கீப்பர் பணி வழங்கணும்...

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரயில்வே ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் மதியழகன் கூறுகையில், ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே கேட் மித்ராவாகவும், ரயில்வே தண்டாவாள பிரிவில் கேங்மேன் வேலை செய்த சுமார் 54 பேர் திருவாரூர், தஞ்சை, நீடாமங்கலம், காரைக்கால், மயிலாடுதுறையில், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் பணியாற்றி வேலையில்லாமல் இருக்கிறோம். இந்நிலையில் முன்னாள் ராணுவத்தினரை கேட் கீப்பர்களாக நிர்ணயிக்க இருப்பதாக அறிகிறோம். ஆனால், நாங்கள் இந்த கேட் கீப்பர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய தாயராக உள்ளோம். எனவே திருவாரூர்-காரைக்குடி இடைப்பட்ட பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்களில் கேட் கீப்பர் பணிகளை வழங்கினால் எங்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு பேரூதவியாக இருக்கும் என தெரிவித்து கோட்ட பொது ேமலாளரிடம் மனு கொடுத்திருக்கிறோம் என்றார்.

Tags : Thiruvarur, Karaikudi
× RELATED திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில்...