×

தாளவாடி அருகே தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மலைகிராமத்தில் தொகுப்பு வீடுகள் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பழங்குடியின மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி அருகே தலமலை ஊராட்சியில் தடசலட்டி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றன.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இக்கிராம மக்களின் முக்கிய தொழிலாகும். இந்த கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 22 குடும்பங்களுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது.தரமற்ற கட்டுமானத்தால் இந்த வீடுகளின் மேற்கூரை கான்கிரீட் காரை பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், வீடுகளின் மேற்கூரையில் கம்பிகள் எலும்புக்கூடு போல் வெளியே தெரிகின்றன.

இதுகுறித்து மலைகிராம மக்கள் தாளவாடி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அபாய நிலையில் உள்ள இந்த வீடுகளில் மழைநீர் கூரை வழியாக ஒழுகுவதால் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக இந்த தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தடசலட்டி மலை கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் கூறியதாவது: தடசலட்டி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தர அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்ககோரி தலமலை ஊராட்சி நிர்வாகத்திடமும், தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், இந்த கிராமத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது தார்ச்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாகிவிட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் புலிகள் காப்பக வனப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க வனத்துறை அனுமதி மறுப்பதாக கூறுகின்றனர்.

எந்தவொரு திட்டமும் எங்கள் கிராமத்தை வந்தடைவதில்லை. காலை, மாலை என 2 முறை மட்டும் ஒரு அரசு பஸ் வந்து செல்கிறது. மற்ற நாட்களில் நாங்கள் 3 கி.மீ. தூரம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து பெஜலட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் செல்ல வேண்டி உள்ளது. எனவே, தடசலட்டி கிராமத்திற்கு வீடு மற்றும் சாலை வசதி உடனடியாக ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Government homes
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...