×

நாகர்கோவிலில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க “சிறுபூங்கா”

நாகர்கோவில்: புன்னைநகரில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி சார்பில், புதிய முயற்சியாக தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு சிறு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் பிரதான சாலைகள் உள்பட ஆங்காங்கே குப்பைகள் கொட்ட தொட்டிகள் இருந்தாலும், குப்பை தொட்டிக்கு வெளியேதான் குப்பைகளை பெரும்பாலான மக்கள் கொட்டி வருகின்றனர். சிலர் சாலையோரங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

இதுதவிர மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாத பகுதிகளிலும் ஒரு சிலர் குப்பைகள் கொட்டுவதை பார்த்து, பலரும் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், அந்தப்பகுதி சுகாதார கேடாகவும், அசுத்தமாகவும் காட்சி அளிக்கிறது. தற்போது இதுபோன்ற குப்பை தொட்டி வைக்கப்படாத பகுதிகளில் சுகாதாரமாக வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புன்னைநகர் சந்திப்பில், குப்பை தொட்டி இல்லாத பகுதியில் சிலர் குப்பைகளை தொடர்ச்சியாக கொட்டி வந்தனர். இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவின் படி மாநகர் நல அலுவலர் கின்சால் தலைமையில் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதி தூய்மை செய்யப்பட்டு, வண்ண கோலங்கள் இடப்பட்டது. தொடர்ந்து 30 மரக்கன்றுகள் மாநகர் நல அலுவலர் டாக்டர் கின்சால் நட்டார். இந்த மரக்கன்றுகள் ஆடு, மாடுகள் உண்ணாமல் இருக்க வேலியும் போடப்பட்டது. மேலும், குறிப்பிட்ட பகுதியில் குப்பைகள் கொட்ட மாட்டோம், நமது சுற்று புறத்தை தூய்மையாக வைப்போம், என்ற விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டன.

இதுபற்றி மாநகர் நல அலுவலர் டாக்டர் கின்சால் கூறியது: நகரில் தூய்மை மற்றும் அழகை பாதுகாக்கும் வகையில், ஆணையர் சரவணக்குமார் ஆலோசனை பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குப்பை தொட்டிகள் வைக்கப்படாத பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அவர்களே முன்வந்து கொட்டாமல் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக புன்னைநகரில், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஒத்துழைப்புடன், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 30 மரக்கன்றுகள் நடப்பட்டு, சிறிய பூங்கா போன்று ஏற்படுத்தியுள்ளோம். இந்த மரக்கன்றுகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் காலை மற்றும் மாலை இருவேளையும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆடு மாடுகள், கன்றுகளை தின்று விடாமல் இருக்க வேலி அமைத்துள்ளோம். இப்பகுதி மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், இதனை பராமரிக்க உதவுவார்கள்.

மாநகராட்சி முழுவதும், எங்கெங்கு குப்பை தொட்டி இல்லாத பகுதிகளில் இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுகின்றன என அந்தந்த பகுதி துப்புரவு ஆய்வாளர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், அந்த பகுதிகளில் சிறு பூங்கா அமைக்க வாய்ப்பு இருந்தால், பூங்கா அமைக்கப்படும். மரக்கன்றுகள் நட முடியாத இடங்களில் மாற்று திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Small park
× RELATED திருப்பத்தூரில் உள்ள நகராட்சி பூங்கா...