காவிரி கரையில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் சாயப்பட்டறை கழிவுகள்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் செயல்படும் சாயப்பட்டறைகள் உலர் கழிவுகளை மூட்டையில் கட்டி எடுத்து வந்து காவிரிக்கரையில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டிச்செல்கின்றனர். மலைபோல் குவிந்துள்ள கழிவுகள், மழைநீரில் கரைந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளுக்கு தேவையான நூல்களுக்கு வண்ணமேற்றும் பணிகள் பள்ளிபாளையம் சாயச்சாலைகளில் நடைபெற்று வருகிறது. மாசு கட்டுப்பாடு துறையினரின் கெடுபிடியால் பெரிய சாயப்பட்டறைகள் பகல் முழுவதும் சாயக்கழிவுகளை தொட்டிகளில் தேக்கி வைத்து இரவில் சாக்கடை கால்வாய் மற்றும் குழாய் அமைத்து காவிரியில் வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அனுமதிபெற்ற சாயப்பட்டறைகளையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சாயக்கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றும் அனுமதிபெற்ற சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகளை துண்டிக்கும்படி அதிகாரிகள், சென்னையில் உள்ள மின்வாரி வாரிய அலுவலகத்திற்கு பரிந்துரைத்து வருகின்றனர். இதனால், மேலும் சில சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிகிறது.

அதிகாரிகளின் கெடுபிடியால் உரிமம் பெற்ற சாயப்பட்டறைகள் பலவும் கலக்கத்தில் உள்ளன. இதனால் கழிவு நீரை அவ்வப்போது சுத்திகரித்தும், பல நேரங்களில் அப்படியே வெளியேற்றியும் வருகின்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இறுதி கழிவுகளை தொட்டியில் உலற வைத்து மூட்டைகளாக கட்டி டிராக்டரில் கொண்டு வந்து காவிரி ஆற்றங்கரையில் கொட்டிச்செல்கின்றனர். மழை நேரங்களில் இந்த கழிவுகள் நீரில் கரைந்து வெள்ளமாக வெளியேறும். இந்த நச்சு கழிவுகள் அனைத்தும் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. சாயக்கழிவுகளில் நீரை பிரித்து கழிவுகளை மட்டும் வெளியேற்றுவது, கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றுவதற்கு ஒப்பாகும். சாயப்பட்டறைகளில் இறுதி கழிவுகள் தற்போது காவிரி ரயில் பாலத்தின் அருகே உள்ள ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் மலை போல கொட்டியுள்ளனர். இதை உடனடியாக அதிகாரிகள் தடுக்காவிட்டால் காவிரி ஆற்றில் அமிலக்கழிவுகள் கலந்து நீர் விஷமாகும் அபாயம் ஏற்படும்.

Related Stories: