ரூ.43 லட்சத்துக்கு 2 மணி நேரம் குடி மராமத்து கலெக்டர் வருகையின் போது ‘பிலிம்’ காட்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்

உடன்குடி: சடையநேரி குளத்தில் ரூ.43 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள் மந்தமாக நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, மெஞ்ஞானபுரம், வேப்பங்காடு, பரமன்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் ஆதாரங்களில் ஒன்று சடையநேரி குளம். இந்த குளத்திற்கு தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் வரும் உபரி நீர் சடையநேரி கால்வாயில் திறந்து விடப்படும். ராமசுப்பிரமணியபுரம் பகுதியில் புத்தன்தருவை, சடையநேரிகுளத்திற்கு தண்ணீர் பிரிந்து செல்லும். பல ஏக்கர் பரப்பளவு கொண்ட சடையநேரிகுளம் நிரம்பினால் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மேல் விவசாயிகள் பயன் பெறுவதுடன் கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

ஆனால் பல ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமல் மணல் மேடாக உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் குளம் பெருகினாலும் சொற்ப நாட்கள் மட்டுமே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனையடுத்து அந்த குளத்தினால் பயன்பெறும் விவசாயிகள் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் குளம் தூர்வாரப்படவில்லை. இந்நிலையில் தற்போது முதல்வர், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏராளமான குளங்களை தூர் வார உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் 2019-2020ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.43லட்சம் மதிப்பீட்டில் சடையநேரிகுளத்தின் கரையோரங்களை பலப்படுத்துதல், வரத்துக் கால்வாய், மறுகால் கால்வாய்களை தூர் வாருதல், மதகு, மடைகளை பழுது பார்த்தல், மறுகால் கால்வாயில் தடுப்புச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதாக சடையநேரி குளத்தில் பேனர் வைத்துள்ளனர். ஆனால் கடந்த ஜுன் மாதமே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் குளத்தினை தூர்வாரி குடிமராமத்து பணிகள் செய்வதாக ராட்சத இயந்திரத்தை கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அதன் பின் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த ஜுலை 26ம் தேதி கலெக்டர் சந்தீப் நந்தூரி சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் பகுதி குளங்களில் குடிமராமத்து பணிகளை துவக்கி பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. இதில் சடையநேரிகுளமும் அடங்கும். சடையநேரி குளத்திற்கு கலெக்டர் வருகையையொட்டி குளத்தினுள்ளேயே சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கலெக்டரின் வருகையின் போது மட்டும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஜேசிபி மூலம் அந்த பகுதியில் உள்ள உடைமரங்கள் சொற்ப அளவிலேயே அகற்றப்பட்டன. பின் அந்த பணிகள் அனைத்தும் கிடப்பிலேயே கிடக்கிறது. தற்போது வரை குளத்தில் கரையை பலப்படுத்தும் பணியோ, உடைந்த மதகுகளை சீர் செய்யும் பணியோ, கருவேல உடைமரங்களை அகற்றும் பணி என எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. கடந்த சில தினங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் மழை பொழிந்து வருகிறது.

இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வரும் போது எப்படியும் சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு குளத்திற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். ஆனால் மழைக்காலத்திற்கு முன்னர் குடிமராமத்து பணிகள் துவங்குமா? பணிகள் முறையாக நடைபெறுமா? என்று விவசாயிகள், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில பணிகள் செய்வது போல் நடித்து பணத்தை ஸ்வாகா செய்து விடுவார்களோ என்ற அச்சமும் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு சடையநேரி குளத்தில் குடிமராமத்து பணிகளை துவங்க வேண்டும் எனவும், அதன் பணிகள் குறித்து தகுந்த அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: